×

கேரள மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேடு அமலாகாது: பிரனாயி விஜயன் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டையும் அமல்படுத்தப்பட போவதில்லை என்று கேரள அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்கான முடிவை கேரள அமைச்சரவை ஒருமனதாக எடுத்துள்ளது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பினால் கேரளாவில் மாநில அரசே இந்த சட்டத்தை எதிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டையும் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரனாயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு வழி ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த பணியை மேற்கொண்டால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம் என தெரிவித்தார். இதையடுத்து, 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில பொது நிர்வாகத்துறை அனுப்பியுள்ளது. அதில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேடு குறித்த எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை. ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம் ஆகும்.

அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற முதல் மாநிலமும் கேரளா தான். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் பிரனாயி விஜயன் ஆர்.எஸ்.எஸ்-ன் விருப்பங்களையும், கற்பனைகளையும் அமல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனிடையே கேரளா அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு மாநில பாஜக தலைவரும், நிசோரம் மாநிலம் முன்னாள் ஆளுநருமான கும்மணம் ராஜசேகரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : National Population Census Record ,Kerala National Census Bureau ,Kerala , Kerala, National Census Record, Not Enforced, Pranayi Vijayan
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...