மங்களூரு விமான நிலையத்தில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: மங்களூரு விமான நிலையத்தில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த பையில் 3 வெடிகுண்டுகள் இருந்தன. அதனை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்தனர். விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் சரியான நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு வெடிகுண்டுகள் செயல் இழக்க செய்யப்பட்டதால் நாசவேலை முறியடிக்கப்பட்டன.

விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை வைத்து நாசவேலையில் ஈடுபட முயன்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலைய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பையை விமான நிலையத்தில் வைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மங்களூரு நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு உயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பின்னர் கொடுக்கப்படுகிறது. உள்ளூர் விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு உரிய நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கிறார்கள்.

Related Stories: