மண்வளத்தை மேம்படுத்தும் நீலப்பச்சைப்பாசி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நீலப்பச்சைப்பாசி என அழைக்கப்படும் நுண்ணுயிரிக்கு சயனோபாக்டீரியா (Cyanobacteria) என்ற பெயரும் உண்டு. சயனோ என்பது அதன் நிறத்தைக் குறிக்கும் கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மருவிய சொல்லாகும். அதன் பொருள் நீலம் என்பதாகும். இவ்வகை நுண்ணுயிரிகள் நீர்நிலைகளில் மிகுதியாகக் காணப்படும் பாசிகளைப்போலுள்ள பாக்டீரியாக்களாகும். இவை பாசிகளினுடைய பண்புகளைக் கொண்டிருந்தாலும் இவை பாக்டீரியா என்னும் பெருந்தொகுதியில் இடம்பெற்றவையாகும். இது ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பால் தனக்குத் தேவையான வேதிப்பொருட்களை உற்பத்தி செய்து வாழ்கின்றன.

ஒளிச்சேர்க்கையால் வாழும் பிராணவாயுவை வெளியிடாத பிற பாக்டீரியாக்களான ஊதா மற்றும் பச்சை சல்பர் பாக்டீரியாக்களிலிருந்து மாறுபட்டு, இவை உணவு உற்பத்தியின்போது பிராணவாயுவை வெளியிடுபவை.இவ்வகைப் பாசிகள் நீர்நிலைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவற்றில் நன்னீர் மற்றும் உப்புநீர் நீலப்பச்சைப்பாசிகள் உள்ளன. இவை நீரில் வாழும்போது தனக்கான உணவை உற்பத்தி செய்ய சில நிறமிகளின் உதவி தேவைப்படுகிறது. அதாவது, பச்சைத்தாவரங்களிலுள்ள பச்சையம் (க்ளோரோபில்) என்னும் நிறமியைக்கொண்டு தனக்கான உணவைப் பரிதியின் ஒளியிலிருந்து உற்பத்தி செய்வதுபோல் இவையும் க்ளோரோபில் A (பச்சையம் வகை ஏ), பைக்கோசையனின் மற்றும் பைக்கோ-எரித்திரின் போன்ற நிறமிகளைக்கொண்டுள்ளன.

இவற்றின் நீலநிறத்திற்குக் காரணமான பைக்கோசையனின் (நீலநிறமி)இதன் தனிச்சிறப்பாகும். ஆகையால் ஆங்கிலத்தில் சயனோபாக்டீரியாக்கள் எனவும் தமிழில் பச்சையம் மற்றும் நீலநிறமியைக்கொண்டு இவை நீலப்பச்சைப்பாசி எனவும் அழைக்கப்படுகின்றன.இவை விவசாயத்திலும், கால்நடைத் தீவனமாகவும், மருத்துவம் மற்றும் உணவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தில் இவை நைட்ரஜன் உற்பத்தியில் ஈடுபடுவதால் நிலத்தைப் பண்படுத்தலில் முக்கிய இடம்பெறுகின்றன. இவற்றின் இன்னொரு வகையான  அர்த்ரோஸ்பைரா என்பது மனித உணவாகவும் விலங்கின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது 70% மிகுதியாகப் புரதத்தைக் கொண்டுள்ளது.

சில மருத்துவப் பண்புகளான சோகை நீக்குதல், நோய் எதிர்ப்பு வலிமை மற்றும் வைட்டமின்களையும் கொண்டுள்ளது. கடைகளில் மாத்திரை வடிவிலும் பொடியாகவும் கிடைக்கின்றது. விவசாயத்தில் நீலப்பச்சைப்பாசி தழைச்சத்தாகப் பயன்பட்டு பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்தை வினியோகம் செய்யும். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீலப்பச்சைப்பாசி வளரும். அறுவடைக்குப் பின்னரும் மண்ணிலிருந்து தானாகவே முளைத்துவிடும். ஒருவயலில் அதிகமாக இருந்தால் அவற்றை அடுத்த வயலிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் அதிக மகசூல் பெறமுடியும். செலவு குறைவான மண்வளத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் இயற்கை உரம் நீலப்பச்சைப்பாசி.

Tags : Nilappaccaippaci , Nilappaccaippaci improve soil!
× RELATED மண்ணின் தன்மையை பொறுத்தே பயிர் மகசூல் அதிகரிக்கிறது