×

வரி ஏய்ப்பு புகார்..: வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்று வேலம்மாள் கல்வி குழுமம். 1986-ல் இருந்து கல்வி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொன்றாக கிளை பரப்பி தற்போது சென்னை முகப்பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, கரூர், சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டகளில் வேலம்மாள் கல்வி குழுமம் இருந்து வருகிறது. அதேபோல், மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்சி போன்ற கல்வி நிறுவங்களும், பொறியியல், மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. 5 ஸ்டார் ஹோட்டல் போல காட்சி அளிக்கும் வகையில் 150 ஏக்கரில் மதுரை ரிங்க ரோடு பகுதியில் உள்ள அனுப்பானடியில் வேலம்மாள் மருத்துவமனை அமைந்துள்ளது.

அதேபோல் அவருடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் சர்வதேச பள்ளி, திருமண மண்டபம் ஆகியவற்றையும் கட்டியுள்ளார். இந்த நிலையில், சென்னை, மதுரை உள்பட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலம்மாள் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சோதனை இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Tags : places ,Velammal Educational Group ,locations ,Income Tax Raid , Tax evasion, Velammal education group, Income tax department,Raid
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு