சொத்துக்களை முடக்க எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்!

புதுடெல்லி: சொத்துக்களை முடக்க எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகியுள்ளார். இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனில் உள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மல்லையாவை அறிவித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், அவரின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, மல்லையாவின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளில், அமலாக்கத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தன் சொத்துக்களை முடக்க தடை விதிக்கக்கோரி, 2019 ஜூன் மாதம் மல்லையா தரப்பில், உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், கடன்களை அடைத்துவிடுவதாக தான் ஒப்புக்கொண்டபோதும் அதை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அப்படி சொத்துக்களை முடக்கவேண்டும் என்றால் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை மட்டுமே முடக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, நேற்று விசாரணைக்கு ஏற்றது. இதையடுத்து, அந்த அமர்வில் உள்ள நீதிபதி ரோஹின்டன் நாரிமன், மல்லையாவிடம் இருந்து இதுவரையிலும் ஒரு பைசா கூட திரும்பவில்லை எனக்கூறி வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். நீதிபதி நாரிமன் விலகியதை அடுத்து, இந்த வழக்கை விசாரிக்க வேறு ஒரு அமர்வை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அறிவிப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: