வருமான வரி வழக்கை எதிர்த்த கார்த்தி சிதம்பரத்தின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு : இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

சென்னை:  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில்  முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு   விற்பனை செய்துள்ளனர்.  இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சத்தை வருமான வரி கணக்கில்காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக ஜனவரி 21ம் தேதி (இன்று)   நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் கோரி இருந்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன்பு நேற்று முறையிடப்பட்டது.  இதை ஏற்ற தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி சுந்தர் முன் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார். இதையடுத்து, தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தரப்பில் நீதிபதி சுந்தர் முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி சுந்தர், விசாரணைக்கு வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் என  தெரிவித்தார்.

Tags : Karthi Chidambaram ,income tax evasion , Karthi Chidambaram's petition, challenge income tax evasion
× RELATED கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல...