×

உள்ளாட்சி தேர்தல் இடைவேளை சட்டமன்ற தேர்தல் வெற்றிதான் கிளைமேக்ஸ் : விழுப்புரத்தில் கலைஞர் சிலை திறந்து மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

விழுப்புரம்: உள்ளாட்சி தேர்தல் முடிவு இடைவேளைதான், சட்டமன்ற தேர்தல் வெற்றிதான் கிளைமேக்ஸ் என்று விழுப்புரத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவ  சிலைதிறப்பு விழா நேற்று மாலை நடந்தது. சிலையை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் முழுவதும் கலைஞர் சிலை திறக்கப்பட்டு வருகிறது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், திருப்புமுனை ஏற்படுத்திய திருச்சியில், கடல் கடந்த அந்தமானில், பக்கத்து மாநிலம் கர்நாடகாவில், இன்று விழுப்புரத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளேன். பலபெருமைக்குரிய விழுப்புரம் மாவட்டம், எனக்கு திருப்பு  முனை ஏற்படுத்தி  கொடுத்த மாவட்டத்தை வாழ்நாளில் மறக்கமுடியாது.  2003ல் இங்கு நடந்த திமுக மண்டல மாநாட்டில் தலைமை ஏற்கும் பொறுப்பை வழங்கியது. தேர்தல்களத்தில் கலைஞர் 13 முறை போட்டியிட்டு ஒருமுறைகூட தோல்வியடையாதவர் என்ற பெருமையை பெற்றவர். 5 முறை முதல்வராக இருந்து தமிழக மக்களுக்காக ஆட்சி நடத்தியவர். முதல்வர்களுக்கெல்லாம், முதல்வராக இருந்து சாமான்யர்களுக்காக ஆட்சி நடத்தியவர். அவர்களின் எண்ணங்களை திட்டங்களாக நிறைவேற்றி சாதனை படைத்தவர்.

 விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளின் 7 ஆயிரம் கோடிகடன் ரத்து, சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்கியது. மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தியது. மகளிர்சுயஉதவிக்குழுக்களை ஏற்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக தாய்மொழியான தமிழக்கு செம்மொழி அந்தஸ்து  ஏற்படுத்திக் கொடுத்தது போன்ற பல சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால், தமிழகத்தில் இப்போது ஒரு ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஒரு சாதனையையாவது பட்டியலிட முடியுமா? வேதனைகளை மட்டுமே அவர்களால் பட்டியலிட முடியும். விருது வாங்கியதாக பேசுகிறார்கள்? இப்போது விருதுக்கே மதிப்பில்லாமல் போய்விட்டது. மத்தியஅரசு நேற்று மாலை ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகளைவிட வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை அதிகரிப்பில் தமிழகம் இரண்டாமிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டால், அகரமுதல எழுத்தெல்லாம் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு வெட்கமாக, கூச்சமாக இல்லையா?. குமரியில் எஸ்எஸ்ஐ சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காவல்துறைக்கே இங்கு  பாதுகாப்பு இல்லை. இதைவிட ஒரு சாட்சி தேவையா?.
கடந்த மக்களவைத்தேர்தலில் 3 குற்றச்சாட்டுகளை மக்களிடம் முன்வைத்தோம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஆணையம் விசாரணைக்கு 6 முறை ஆஜராகக்கோரி சம்மன் அனுப்பியும் ஒருமுறைக்கூட சாட்சி சொல்ல ஓபிஎஸ் செல்லவில்லையே?

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மிரட்டப்பட்டு, பண்ணை வீட்டில் அடைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். 8 ஆண்டுகளாக நடைபெற்ற சம்பவம் காவல்துறைக்கு தெரியாதா? புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் போனதா? இவ்வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டார்கள். போலீசார் முறையாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்காமல் இருந்ததே காரணம். 3 வது குற்றச்சாட்டு கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை. இவ்வழக்கில் முக்கியசாட்சியாக உள்ள காவலாளி கிருஷ்ணலாலா தலைமறைவாக இருக்கிறார். கோடி, கோடியாக கொள்ளையடிக்க வந்ததாக கூலிப்படையினர் தெரிவித்துள்ளனர். 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் அரசுதானே பொறுப்பேற்கவேண்டும். இன்னும் ஒரு ஆண்டுதான்,  திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர்களின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவோம். தண்டனைகளை  நிச்சயம் வாங்கித்தருவோம். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 89 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. பட்டியலில் யார், யாருக்கு பணம்பட்டுவாடா செய்யப்பட்டது என்ற ஆதாரங்களையும் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி புகார் கொடுத்தார். ஆனால் வழக்கை ரத்து செய்துவிட்டார்கள். முறையாக வழக்கை விசாரித்திருந்தால் எடப்பாடி இந்நேரம் சிறையில்தான் இருந்திருப்பார்.

அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் உறவினர், பினாமிகளுக்குமட்டுமே டெண்டர். 3,500 கோடி ஊழல் குறித்து திமுக நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் டெல்லிக்கு சென்று நீதிமன்றத்தில் தனி உத்தரவு பெற்றுவந்தார். யாருக்கும் பயப்படமாட்டேன் என்று கூறும் எடப்பாடி டெல்லி சென்றது ஏன்?. நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்தநிலையில், எடப்பாடி மட்டும் ஆதரித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவோம் என்று நாடகமாடி வருகிறார். மத்திய அரசின் இந்த திருத்த சட்டத்தால் அவரால் கண்டிப்பாக பெற்றுத்தரமுடியாது. ஏதோ சட்டமேதைபோல் பேசிக்கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் மீறி மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றுள்ளது. 512 மாவட்ட கவுன்சிலர்களில், 242 இடங்களையும், 5076 ஒன்றிய கவுன்சிலர்களில் 2,090 இடங்களையும் பிடித்துள்ளோம். 2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலைவிட தற்போது 34 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். தமிழகத்தில் 20 இடங்களில் அதிமுகவின் தில்லுமுல்லுகளை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.

28ம் தேதிக்குள் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். கண்டிப்பாக இந்த இடங்களிலும் திமுகதான் வெற்றிபெறும்.
முறையாக தேர்தல் நடந்திருந்தால் 90 சதவீத வாக்குகளை பெற்றிருப்போம். விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க உள்ளோம். நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம். திமுகவின் வெற்றியை தடுப்பதற்காக முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியுடன் சில ஊடகங்கள் திட்டமிட்டு சதிவேலையில் ஈடுபட்டுள்ளனர். நேருக்குநேர் மோத லாயக்கில்லை. கலைஞர் இருக்கும்போது சந்திக்காத சதிகளா? நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு இடைவேளைதான். சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிடைக்கும் வெற்றிதான் கிளைமேக்ஸ்.எத்தனையோ வெற்றி, தோல்வியை நாம் பார்த்துள்ளோம். விரைவில் இம்மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய பெற்றி பெறுவோம்.பொன்முடி வெற்றியை பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கலைஞர் சிலைதிறப்பு விழாவில் இந்த சபதத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார். விழாவுக்கு மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமை தாங்கினார். கவுதம சிகாமணி எம்பி, எம்எல்ஏக்கள் நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், உதயசூரியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : election ,Assembly ,MK Stalin ,Villupuram Local , Local election, interim Assembly election, victory climax,MK Stall
× RELATED அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம்...