ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் : மத்திய அரசுக்கு கட்சி தலைவர்கள் எச்சரிக்கை

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைகோ(மதிமுக பொது செயலாளர்): காவிரிப் பாசன மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைவதும், அதற்காக மக்கள் கருத்தைக் கேட்க மாட்டோம் என்று எதேச்சாதிகாரமாக பாஜக அரசு அறிவித்துள்ளதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது. தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதை ஒருகாலும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதை மத்திய பாஜக அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் உணர வேண்டும்.

Advertising
Advertising

டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  

தமிமுன் அன்சாரி எம்எல்ஏ(மஜக பொதுச் செயலாளர்): மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஹைட்ரோகார்பன் திட்டம் பணிகள் தொடங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இதற்கு சுற்றுச்சூழல் துறையின் ஓப்புதல் பெற தேவையில்லை என்ற புதிய நிலைப்பாட்டின் மூலம் மத்திய அரசு மக்களின் மீது போர் தொடுத்திருக்கிறது. சுமார் 60 லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை பறித்து அவர்களை அகதிகளாக மாற்றும் இந்த நாசகார திட்டத்தை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மக்களே களம் இறங்கி புரட்சிகர போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.  

முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): டெல்டா மாவட்ட விவசாயிகள் சிறிது காலம்  நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது, எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றுவது போல மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறு அமைக்க மாநில அரசு அனுமதி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம் என மாநில அரசு அறிவித்துள்ள போதிலும், மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

Related Stories: