×

இலங்கை அரசின் ராணுவ பலத்தை அதிகரிக்க தமிழர் வரிப்பணத்தை வாரி இறைப்பதா? : மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்

சென்னை: இலங்கை அரசின் ராணுவ பலத்தை அதிகரிக்க தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்பதா என்று மத்திய அரசுக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசு, இலங்கை ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு 355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை ஆகும். இலங்கையில், தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள், வீடுகள் உள்ளிட்ட உடமைகளையும் பறித்து, ராணுவம் முகாம் அமைத்து, தமிழர்கள் 24 மணி நேரமும் திறந்தவெளிச் சிறையில் இருப்பதைப் போன்று கட்டுக்காவல் ஏற்படுத்தி இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வரும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து சிங்களக் கொலைகார அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இச்செயல் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் பாஜக அரசு செய்யும் பச்சை துரோகம் ஆகும். எனவே இந்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க ரூபாய் 355 கோடி நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும்.

Tags : government ,Sri Lankan ,Vaiko , Tamil tax payable, increase the military strength ,Government of Sri Lanka?
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை