பவர் பேங்க், அல்வா, ஜாம், ஊறுகாவிற்கு தடை பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை விமான நிலையம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ‘ரெட்அலர்ட்’ அறிவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள விமான நிலையத்தில் நேற்று காலை கேட்பாறற்றுக்கிடந்த ஒரு கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து சோதனை செய்தனர். அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அதை செயலிழக்கச் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதமாக ஏழு அடுக்கு பாதுகாப்பு தொடர்ந்து அமலில் உள்ளது. தற்போதைய மங்களூரு விமானநிலைய சம்பவம் குடியரசுதினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள், கன்னியாகுமரியில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்,   காரணமாக சென்னை விமான நிலையத்தில் ரெட் அலர்ட்  அமல்படுத்தப்பட்டுள்ளது.
Advertising
Advertising

விமான நிலையத்தில் கூடுதலாக வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் அதிநவீன இன்லைனர், ஸ்கேனர் சிஸ்டம் என்ற புதிய சக்திவாய்ந்த ஸ்கேனிங் மிஷின் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் பொருத்தப்பட்டு அது நேற்றில் இருந்து செயல்படத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு விமான நிலையத்தில் இதேபோன்ற சக்திவாய்ந்த  அதிநவீன இன்லைனர் ஸ்கேனிங்க் இந்தியாவிலேயே சென்னையில்தான் முதல்முதலாக பொருத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். இது ஒரு மணி நேரத்திற்கு 1800 பைகளை நுட்பமாக ஸ்கேன் செய்யும் திறன் வாய்ந்தது.

மேலும் விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் விதித்துள்ளனர். செல்போன் சார்ஜ்போடும் பவர் பேங்குகள், சூட்கேஸ் பைகளில் வைத்து எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதிபெற்று மட்டுமே எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கூடுதலான சோதனை கார் பார்க்கிங், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியிலும் கூடுதலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்தியதொழில் பாதுகாப்பு படையினரின் பணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானங்களில் திரவப்பொருட்களான அல்வா, ஜாம், ஊறுகாய் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories: