தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருது பெறுபவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது : முதல்வர் எடப்பாடி பெருமிதம்

சென்னை: தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 5ஆக இருந்த  விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கூறினார். திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் சிறப்புரையாற்றினார்கள். விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 10 கோடி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்கு தொகையாக 1 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertising
Advertising

தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சி துறையில், 5ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று விருதுகள் பெற்ற தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.

கீழடியை தொடர்ந்து மேலும் 4 இடங்களில் அகழ்வாராய்ச்சி

சென்னையில் தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அறிஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்துள்ளார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகு 9 புதிய விருதுகளை அறிவித்துள்ளார். தமிழனின் முதல் அடையாளம் விவசாயம். விவசாயத்தின் பிரதிநிதியாக, விவசாய முல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். 23 அமைச்சர்கள் இந்த விழாவிற்கு வந்திருப்பது சிறப்புக்குரியது.கீழடி ஒன்று மட்டுமே உலக அளவில் நம்முடைய பெருமையை உயர்த்தி பிடித்த நிலையில், இந்தாண்டு கீழடியை தொடர்ந்து ஆதிச்சநல்லூர், ஈரோடு, கொடுமணல் உள்பட 4 புதிய இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற இருக்கிறது. இதனை முதல்வர் இந்த ஆண்டு தொடங்கி வைக்க இருக்கிறார். எனவே இனி வரும் ஆண்டுகள் தமிழுக்கு, தமிழ் கலைக்கு உன்னதமான ஆண்டாக அமையும். இந்தியாவிலேயே அதிக புத்தகங்கள் அச்சிடப்படுவது தாய் தமிழ்மொழியில்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: