முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் பட்ஜெட், புதிய தொழிற்சாலைகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, புதிய தொழிற்சாலைகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 2020ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதையடுத்து 3 நாள் கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற்று 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ஆலோசனை நடத்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், முதல்வரின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் 90 நிமிடம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரம் தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கூறியதாவது:

தமிழகத்தின் 2020-2021ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து முதல்வர் அனைத்து அமைச்சர்களிடமும் விவாதித்தார். மேலும், தமிழகத்தில் புதிதாக 6 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடியில் ₹40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெரும்புதூரில் சீன நிறுவனம் புதிதாக தொடங்கும் மின்சார வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை இதில் அடங்கும். இதுதவிர, தென் மாவட்டங்களுக்கு தொழிற்சாலை அமைப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். எந்தெந்த தொழில் நிறுவனங்கள் புதிதாக தமிழகத்தில் வரும் என்பது குறித்து வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

அதேபோன்று, பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும், தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முக்கியமாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: