தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரம் தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்த 10 பேரையும் என்ஐஏ விசாரிக்க முடிவு

* 10 நாள் காவல் முடிந்து 3 தீவிரவாதிகள் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில் க்யூ பிரிவு போலீசார் கைது ெசய்த 10 தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்த சுரேஷ்குமார்(48) கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளுக்கு உதவிய வழக்கில் கடந்த 7ம் தேதி பெங்களூரை சேர்ந்த முகமது ஹனிப் கான்(29), இம்ரான் கான்(32), முகமது சையது(24) ஆகியோரை க்யூ பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கைது ெசய்தனர்.

பின்னர் 3 தீவிரவாதிகளை கடந்த 10ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாள் காவலில் க்யூ பிரிவு போலீசார் எடுத்து விசாரணை நடத்தினர்.அப்போது, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான காஜா மைதீன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு கொண்டு, அவர்கள் ஆலோசனைப்படி பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ‘ஹல் ஹந்த்’ என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி நடத்தி வந்ததும் தெரியவந்தது. அந்த தீவிரவாத அமைப்புக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பலர் உறுப்பினர்களாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சுரேஷ்குமார் கொலை வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த காஜாமைதீன், சையது அலி நவாஸ், அப்துல் சமீம் ஆகியோருக்கு அடைக்காலம் கொடுத்து தலைமறைவாக இருக்க உதவியதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் அளித்த தகவலின்படி தீவிரவாதிகளுக்கு போலி முகவரியை பயன்படுத்தி சிம்கார்டு பெற்று தந்ததாக காஞ்சிபுரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருந்ததும், கடந்த 8ம் தேதி சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை செய்த குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த உசேன் ஷெரீப் மற்றும் குடியரசு தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்வு நடத்த சதி திட்டம் தீட்டிய ரகசியங்கள் குறித்தும் 10 நாள் காவலில் தெரியவந்துள்ளதாக க்யூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதைதொடர்ந்து 3 தீவிரவாதிகளான முகமது ஹனிப் கான்(29), இம்ரான் கான்(32), முகமது சையது(24) ஆகியோரை 10 நாள் காவல் முடிந்து நேற்று மதியம் எழும்பூர் நீதிமன்றத்தில் க்யூ பிரிவு போலீசார் அஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் பிப்ரவரி 3ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 3 பேரையும் க்யூ பிரிவு போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே காவலில் 3 பேர் அளித்த வாக்கு மூலம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ‘ஹல் ஹந்த்’ இயக்கத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள நபர்கள் குறித்து முழு தகவல் சேகரிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தேசிய புலனாய்வு முகமை, சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை குற்றவாளிகள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் கொலை குற்றவாளிகள் உட்பட க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ள 10 தீவிரவாதிகளில் 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,  அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த  என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பூந்தமல்லி நீதிமன்றதில் மனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த வழக்கு க்யூ பிரிவில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. 

Related Stories: