×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டாவில் 10லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் : மீனவர்கள், விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு

நாகை:  ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதுவரை மொத்தம் 4 முறை ஏலங்கள் நடத்தப்பட்டு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 18ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. மத்தியஅரசின் இந்த அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கை. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டமான நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக மீனவர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 5வது ஹைட்ரோ கார்பன் திட்டம் கடலோர பகுதிகளில் செயல்படுத்தப்பட்டால் மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடி தொழில் செய்ய முடியாது. எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக இணைந்து போராட்டம் நடத்த திட்டம் வகுத்து வருகிறோம் என்றனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது: 5வது சுற்று ஏலத்தில் காவிரிப்படுகையில் 4064.22 ச.கி.மீ பரப்பளவை பன்னாட்டு முதலாளிகள் கைப்பற்ற இருக்கிறார்கள். காவிரிப்படுகையையும், அதையொட்டிய கடற்பகுதியையும் ஒட்டுமொத்தமாக அழிக்க இருக்கின்றனர். காவிரிப்படுகை பாதிப்புக்குள்ளானால் டெல்டா மாவட்டத்தில் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக நேரிடும்.  இத்திட்டத்தை கைவிடா விட்டால் போராட்ட களத்தில் குதிக்க நேரிடும் என்றார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க நாடுமுழுவதும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோ, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமோ தேவையில்லை என மத்திய அரசு சட்டம் நிறைவேற்றி அரசிதழிலும் வெளியிட்டிருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. இதை வண்மையாக கண்டிப்பதோடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

Tags : Delta ,Fishermen , 10 million people lose , jobs in Delta ,hydrocarbon project
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு