×

உளுந்தூர்பேட்டை அருகே பஸ்கள் மோதலில் காரில் வந்த மணமகன் உட்பட 4 பேர் பலி : 22 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை:   உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பேருந்து மோதியதில் காரில் வந்த மணமகன் உட்பட 4 பேர் பலியானார்கள்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜசக் அய்யா. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவன தலைவர். கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார். இவரது மகன் ராஜன்வின்னரசு(23)க்கு திருநெல்வேலியில் திருமண நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு குடும்பத்தினருடன் ஒரு காரில் திரும்பி கொண்டு இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சியில் கார் சென்றபோது, பின்னால் அறந்தாங்கியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு பேருந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில் காரின் பின்பகுதி முற்றிலும் சேதம் அடைந்ததால், ஜசக் குடும்பத்தினர் அரசு பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ்சில் இருந்த பயணிகள் சாலையில் இறங்கி பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இதே நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ், கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சின் பின் பகுதியில் மோதியதுடன் நின்றிருந்தவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரக்கோணத்தை சேர்ந்த ராஜன்வின்னரசு மற்றும் அரசு பேருந்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த வெள்ளைச்சாமி(39), காஞ்சிபுரம் மாவட்டம் களத்தூரை சேர்ந்த சற்குணம்(39), அறந்தாங்கியை சேர்ந்த அருண்பாண்டியன் (30) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் கோவிந்தராஜ்(37), கண்டக்டர்  சுப்ரமணியன்(30) உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்களில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


Tags : Ulundurpet Four ,bus accident , Four killed, 22 injured , bus accident,Ulundurpet
× RELATED குன்னூர் பேருந்து விபத்து...