×

குமரி எஸ்.எஸ்.ஐ. கொலையில் கோர்ட்டில் ஆஜர் தீவிரவாதிகளை 28 நாள் விசாரிக்க மனு

நாகர்கோவில்: குமரி எஸ்.எஸ்.ஐ. கொலையில் கைதான 2 தீவிரவாதிகள், நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 28 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் கடந்த 8ம்தேதி இரவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் மாலிக்தீனார் நகர் பகுதியை சேர்ந்த தவுபீக் (28) ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் மீது உபா சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, டெல்லியில் கைது செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தவுபீக், அப்துல் சமீம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும், தங்களது கூட்டாளிகளை போலீசார் கைது செய்ததால், பழிவாங்கும் நோக்கத்தில் காவல்துறை பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை அவர்கள் சுட்டுக்கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான முழு விசாரணைக்காக, தீவிரவாதிகள் தவுபீக், அப்துல் சமீம் ஆகியோரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிந்ததை தொடர்ந்து, தீவிரவாதிகள் இருவரும் நாகர்கோவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மதியம் 12.20 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். மாவட்ட நீதிபதி அருள்முருகன், வழக்கை விசாரித்தார். அப்போது சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கணேசன், ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் 28 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறி இருந்தார். கைதானவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா, 28 நாட்கள் என்பது மிகவும் அதிகம். ஏற்கனவே தவுபீக் தாயார் தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. அந்த மனு விசாரணையில் உள்ளது என்றார்.  இதற்கு அரசு வக்கீல் ஞானசேகர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆட்கொணர்வு மனுவையும், இந்த வழக்கையும் ஒன்று சேர்க்க வேண்டாம் என கூறி, பிற்பகல் 1.30க்கு விசாரணையை தள்ளி வைத்தார். பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் ராஜா, போலீஸ் காவலில் அனுமதிக்க கூடாது என்றார்.

அரசு வழக்கறிஞர் ஞானசேகர், உ.பா. சட்டத்தின் கீழ் 160 நாட்கள் வரை காவல் கேட்க முடியும். ஆனால் நாங்கள் 28 நாட்கள் தான் கேட்டுள்ளோம் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள்முருகன், விசாரணையை இன்று மாலை 3 மணிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று மாலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது போலீஸ் காவல் கிடைத்ததும், அவர்களை விசாரணைக்கு கொண்டு செல்வோம் என போலீசார் கூறினர். தீவிரவாதிகள் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து, நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

நீதிமன்றம் மாறியது ஏன்? : நீதிமன்ற காவல் முடிந்து தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரும் நேற்று மீண்டும் குழித்துறை கோர்ட்டில் தான் ஆஜர்படுத்தப்பட இருந்தனர். இதையொட்டி குழித்துறை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஏற்கனவே கடந்த 16ம் தேதி இவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்ட வாகனத்தை நீதிமன்றம் அருகே சிலர் முற்றுகையிட்டனர். மேலும் இவர்களுக்கு ஆஜராக வந்த வழக்கறிஞர்களின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதையடுத்தே தீவிரவாதிகள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று திடீரென மாற்றி ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு ஆவணங்களும் அங்கு கொண்டு வரப்பட்டன. உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால், மாவட்ட முதன்மை நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்பதால், குழித்துறையில் இருந்து இங்கு மாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

கதறி அழுத தாயார்:  தவுபீக்கின், தாயார் ஜன்னத் நேற்று நீதிமன்றத்துக்கு வந்து இருந்தார். தவுபீக்கை போலீஸ் வேனில் இருந்து இறக்கியதும் அவர் கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி அழைத்து சென்றனர். அப்போது நிருபர்களிடம் ஜன்னத் கூறுகையில், தவுபீக் எங்களை பிரிந்து நீண்ட நாட்கள் ஆகிறது. கர்ப்பிணியான எனது மருமகளையும், எங்கள் குடும்பத்தினரையும் போலீசார் தொந்தரவு செய்தனர். ஏற்கனவே தவுபீக்கை காணவில்லை என நாங்கள் மதுரை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளோம். அதன் பிறகே போலீசார் தவுபீக்கை கைது செய்ததாக அறிவித்தனர். சிசிடிவி காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இருப்பது எனது மகன் அல்ல என்றார்.

என்கவுன்டருக்கு திட்டமா?

குற்றம் சாட்டப்பட்டுள்ள தவுபீக், அப்துல் சமீம் ஆகியோருக்கு ஆதரவாக மதுரையில் இருந்து ஐகோர்ட் வழக்கறிஞர் ராஜா உள்பட 4 பேர் ஆஜர் ஆகி இருந்தனர். ராஜா வாதாடுகையில், கைதாகி உள்ளவர்களை போலீஸ் காவலில் ஒப்படைத்தால் பாதுகாப்பு இல்லை. சமூக வலைதளங்களில் இவர்களை என்கவுன்டர் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 28 நாட்கள் கேட்பது போலீசார் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல திட்டம்

எஸ்.எஸ்.ஐ. கொலையில் கைதானவர்களை 28 நாட்கள் போலீஸ் காவலில் கேட்டு மனு செய்தது ஏன்? என்பது பற்றி அரசு வக்கீல் ஞானசேகர் கூறுகையில், கர்நாடகம், கேரளம், ஆந்திரா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த ெகாலைக்கு பின்னால் இருப்பவர்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். இவற்றையெல்லாம் எங்களது வாதத்தின் போது எடுத்துரைத்து உள்ளோம். உ.பா. சட்டத்தை பொறுத்தவரை 28 நாட்கள், அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags : extremists ,Azhar Extremists In Court Over Murder ,court ,Azhar , Kumari SSI Petition , investigate Azhar extremists , court over murder
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...