சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி கர்ப்பிணி தாய், மகன் பரிதாப பலி: மாமல்லபுரம் அருகே சோகம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற தாய், மகன் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திலகவதி (35) நிறைமாத கர்ப்பிணி. இவர்களது மகன் திருமுருகன் (4) கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறான். இந்நிலையில், பள்ளியில் விடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக திலகவதி அழைத்து சென்றார். புதிய கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையை தாயும், மகனும் கடக்க முயன்றனர். அப்போது, அதிவேகத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.

Advertising
Advertising

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடிவருகின்றனர்.இதற்கிடையில் மனைவியும், மகனும் கார் மோதி இறந்த சம்பவ நேரத்தில் சத்தியமூர்த்தி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தார். அவருக்கு வாக்கி டாக்கி கருவி மூலம் இருவரும் கார் விபத்தில் இறந்த சம்பவம் குறித்து உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடலில் இருந்து கரைக்கு திரும்பிய சத்தியமூர்த்தி தனது மனைவி மற்றும் மகனை பார்த்து அழுது காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

Related Stories: