புளியந்தோப்பு பகுதியில் வாலிபரை தாக்கி பணம் பறித்த 5 ரவுடிகள் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்தவர் சாருஸ்கான் (36). இவர், இரு தினங்களுக்கு முன்பு அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள், சாருஸ்கானை சரமாரியாக தாக்கிவிட்டு 1000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் சாருஸ்கான் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள், சாருஸ்கானை தாக்கி பணம் பறித்தது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், புளியந்தோப்பு, கே.எம். கார்டன் பகுதியை சேர்ந்த சக்திவேல் (40), சுரேஷ் (40), கன்னிகாபுரத்தை சேர்ந்த மாரி (33), வ.உ.சி. நகரை சேர்ந்த ரகு (42), வியாசர் பாடியை சேர்ந்த ரபிக் (23) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், சாருஸ்கானை தாக்கி பணம் பறித்தது இவர்கள்தான் என்பதும், இவர்கள் மீது பல்வேறு வழக்கு காவல்நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரவுடிகள் 5 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

* திருமங்கலம் வெல்கம் காலனியை சேர்ந்தவர் சுசீலா (61). நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் நடந்து வந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்து 4 சவரன் தாலி சங்கிலியை பறித்து தப்பி சென்றனர். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஆந்திராவை சேர்ந்தவர் உமாமகேஸ்வர ரெட்டி (26). சோழிங்கநல்லூரில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்று நேற்று காலை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை ஒரு மர்ம நபர் வழிமறித்து செல்போனை பறித்து தப்பினார். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

* அரும்பாக்கத்தை சேர்ந்தவர் பவானி (20). நேற்று முன்தினம் மாலை தனது மொபெட்டில் கடைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்தில் இருந்த 4 சவரன் சங்கிலியை பறித்து தப்பினர். அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் சீனிவாசலு (52). இவரது மகன் நரேஷ், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார். இதனால் அவரது தந்தை சீனிவாசலு மனமுடைந்த நிலையில் இருந்தார். நேற்று முன்தினம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

* அம்பத்தூர் அடுத்த புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (39). மனைவி பேபி ஷாலினி (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவி குழந்தையுடன் சிவகங்கைக்கு சென்றார். பின்னர் அவர் மீண்டும் நேற்று காலை குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு உடைத்து 5 சவரன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

* அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், ராஜாராம் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன் (36). மனைவி சௌதாம்பிகை. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ராமநாதபுரம் சென்றார். நேற்று காலை வந்துபார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் நாலாபுறமும் சிதறிக்கிடந்தது. நகை, பணம் கிடைக்காததால் சில பொருட்களை தூக்கி கீழே இழுத்து போட்டு உடைத்து சென்றுள்ளனர். புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஓட்டேரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (38). மெக்கானிக். நேற்று காலை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் வந்தபோது கத்தியை காட்டி மிரட்டி ரூ.8500 பறித்துச் சென்ற புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த தினேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: