இதுதான் மதநல்லிணக்கம் இந்து பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த இஸ்லாமியர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்து ஏழைப் பெண்ணுக்கு இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து மசூதியில் திருமணம் நடத்தி வைத்தனர். கேரளாவின் காயங்குளம் அருகேயுள்ள சேராவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி பிந்து. தம்பதிக்கு மகள் அஞ்சு (21) உட்பட 2 குழந்தைகள். நகைத் தொழிலாளியான அசோகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால், குடும்பம் வறுமையில் வாடியது. அருகில் உள்ளோர் வீடுகளில் வேலை செய்து குடும்பத்தை பிந்து கஷ்டப்பட்டு நடத்தி வந்தார்.

Advertising
Advertising

இந்த நிலையில் மகள் அஞ்சு திருமண வயதை எட்டியதால் அவருக்கு வரன் பார்த்தார். ஆலப்புழா கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த சசிதரன் மகன் சரத் என்பவருக்கும், அஞ்சுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, நேற்று முன்தினம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திருமணத்தை நடத்த பிந்து மிகவும் சிரமப்பட்டார். பலரிடம் கடன் வாங்கியும் திருமணத்துக்கான பணத்தை சேகரிக்க முடியவில்லை. இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் சேராவள்ளி முஸ்லிம் கமிட்டி செயலாளர் தாஜுதீன் ஆலோசனைப்படி ஜமாத் நிர்வாகிகளிடம் உதவி கேட்டார்.

இதையடுத்து, நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அஞ்சுவின் திருமணத்துக்கு உதவ ஜமாத் நிர்வாகிகள் தீர்மானித்தனர். மேலும் நிர்வாகிகள் சேர்ந்து திருமண செலவுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அஞ்சுவின் திருமணத்துக்காக 10 பவுன் நகை, 2 லட்சம் ரூபாயும் வழங்கினர். திருமணத்துக்கான பந்தல், மணமேடை போன்றவற்றை பள்ளிவாசல் வளாகத்திலேயே அமைத்தனர். அதுபோல கமிட்டியினரே திருமண அழைப்பிதழை நேரடியாக சென்று அனைவருக்கும் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அஞ்சு-சரத் திருமணம் கோலாகலமாக நடந்தது. மேலும் பள்ளிவாசல் வளாகத்திலேயே அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

Related Stories: