மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை மதிப்பெண் மட்டுமே எல்லாம் ஆகிவிடாது

புதுடெல்லி: ‘‘தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதால் மட்டும் வாழ்க்கையில் எல்லாம் நடந்து விடாது. தேர்வுதான் எல்லாம் என்ற மனநிலையிலிருந்து மாணவர்கள் வெளிவர வேண்டும்’’ என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். பொதுத் தேர்வுக்கு முன் மாணவர்களை சந்தித்து தேர்வுக்கு தயாராவது குறித்து பிரதமர் மோடி உரை நிகழ்த்துவது கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் நடக்கும் இந்நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தல்கடோரா அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்தும் 66 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி டி.வி, ரேடியோ மற்றும் சமூக இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

Advertising
Advertising

மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்நிகழ்ச்சியில் எந்த தடையுமின்றி மாணவர்கள் என்னுடன் பேசலாம் என்றார். பிரதமர் மோடியிடம் முதல் கேள்வியை ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி யாஷாஸ்ரீ என்பவர் கேட்டார். அதில் ‘‘வாரிய தேர்வுகள் மனதை உற்சாகம் இழக்கச் செய்கின்றன. இதற்கு நாம் என்ன செய்வது?’’ என கேட்டார். இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது: விருப்பம், விருப்பபின்மை எல்லாம் சாதாரண விஷயம். ஒவ்வொருக்கும் இந்த உணர்வுகள் ஏற்படும். இது தொடர்பாக நான் ஒன்றை கூற விரும்புகிறேன். சந்திரயான்-2 நிலவில் தரையிறக்கிபோது நான் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இருந்த நேரத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இதன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், என்னை இஸ்ரோ செல்லக் கூடாது என்று கூறினர். ஆனாலும், நான் அங்கு இருந்தேன்.

தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. அதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தற்காலிக பின்னடைவை தோல்வியாக கருதக்கூடாது. பின்னடைவு, அதைவிட சிறந்ததை கொண்டு வரலாம். மதிப்பெண் மட்டுமே எல்லாம் ஆகிவிடாது. தேர்வுதான் எல்லாம் என்ற நினைப்பிலிருந்து வெளிவர வேண்டும். படிப்பை தவிர மற்ற விஷயங்களிலும் நாம் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொணர அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தேர்வுக்கு மாணவர்கள் நம்பிக்கையுடன் தயாராக வேண்டும். மன அழுத்தத்துடன் தேர்வு அறைக்கு செல்லக் கூடாது. அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்வுக்கு தயாராகுங்கள். நவீன தொழில்நுட்பங்களை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். அதே நேரத்தில் அந்த தொழில்நுட்படம் நம்மை நிர்வகிக்க அனுமதிக்க கூடாது. அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பலம் நமக்கு இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அறைகளில் ஒன்று, எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் இருக்க வேண்டும். அங்கே நுழைபவர்கள் எந்த தடையும் இன்றி நுழைய வேண்டும். ஒய்வு நேரத்தில் வயதானவர்களுடன் செலவழியுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: