பா.ஜ. தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டு

புதுடெல்லி: பாஜ தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜ கடந்த 2014ம் ஆண்டு தனி பலத்துடன் மத்திய ஆட்சியை பிடித்தது. அப்போது பாஜ தலைவராக ராஜ்நாத் சிங் இருந்தார். அப்போது பிரதமராக பதவியேற்ற மோடி, தனது அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்கை உள்துறை அமைச்சராக்கினார். பாஜ.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ராஜ்நாத் சிங் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவராக பிரதமருக்கு நெருக்கமான அமித்ஷா நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில் பாஜ பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றது.

மேலும், கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் பாஜ அமோக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இம்முறை அமித்ஷாவை, மத்திய உள்துறை அமைச்சராக்கினார் பிரதமர் மோடி. இதனால் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமையால் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பாஜ உட்கட்சி தேர்தல் நடைபெற்று வந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர்கள் ஒன்று கூடிதான் தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்காக காலியாக இருந்த மாநில தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டன. இந்நிலையில், கட்சித் தலைவர் பதவிக்கு முறைப்படி ஜே.பி.நட்டா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜ மூத்த தலைவர்கள் பலர் ஜே.பி.நட்டாவுக்கு ஆதரவாக வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நட்டாவை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பாஜ.வின் 11வது தலைவராக 59 வயதான ஜே.பி.நட்டா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று மாலை பாஜ.வின் தேர்தல் பணிக்குழு தலைவர் ராதாமோகன் சிங் முறைப்படி அறிவித்தார். அவருக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜ தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* ‘பொய்யை பரப்பும் எதிர்க்கட்சிகள்’

ஜே.பி.நட்டா முறைப்படி கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன், டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘‘தேர்தலில் தோற்ற எதிர்க்கட்சிகள் குழப்பத்தையும், பொய்யையும் பரப்பி வருகின்றன. நட்டாவின் தலைமையில் கட்சி புதிய உயரத்துக்கு செல்லும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதேபோல், அமித்ஷாவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: