தென் ஆப்ரிக்காவுடன் 3வது டெஸ்ட் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

போர்ட் எலிசபத்: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது. செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 499 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்டோக்ஸ் 120, போப் 135* ரன் விளாசினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து பந்துவீச்சில் டோம் பெஸ் 5, பிராடு 3, சாம் கரன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Advertising
Advertising

இதையடுத்து, 290 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 4ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்திருந்த அந்த அணி, கடைசி நாளான நேற்று 237 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா 76.4 ஓவரில் 138 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்த நிலையில், கேஷவ் மகராஜ் - டேன் பேட்டர்சன் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 99 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கேஷவ் மகராஜ் 71 ரன் (106 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். பேட்டர்சன் 39 ரன்னுடன் (40 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோ ரூட் 4, மார்க் வுட் 3, பிராடு, பெஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் வென்று, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புகான 30 புள்ளிகளை தட்டிச் சென்றது. போப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்க, 4வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்கில் ஜன. 24ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: