×

என்பிஆர் கடிதம் தராவிட்டால் கணக்கு முடக்கம் என பீதி காயல்பட்டினத்தில் வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள்

ஆறுமுகநேரி:  தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் லெப்பை தம்பி சாலையில் தேசியமாக்கப்பட்ட வங்கி (சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா) கிளை செயல்பட்டு வருகிறது. 4 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இங்கு கணக்கு வைத்துள்ளனர். கே.ஒய்.சி. படிவம் மூலம் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்துவது வழக்கம்.  இதனிடையே வங்கியின் மும்பை தலைமை அலுவலகம் சார்பில் ரிசர்வ் வங்கி நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகள் தொடர்பாக கடந்த ஜன.11ம் தேதி பொது அறிவிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் அண்மையில் கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்காது இருந்தால், அதனை உடனடியாக சமர்பிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். தங்களது கணக்கு தடைபடாத சேவைக்கு, கே.ஒய்.சி படிவத்தின் படி அடையாளச்சான்று மற்றும் தற்போதைய இருப்பிட முகவரி, நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பணி அட்டை, ஆதார் கார்டு, மற்றும் என்பிஆர் எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் ஜனவரி 31, 2020க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காத வங்கி வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை முடக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இது தொடர்பான தகவல் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தகவல் அறிந்து காயல்பட்டினம் பகுதி மக்கள், தாங்கள் செலுத்திய பணத்தை எடுக்க வங்கியில் திரண்டனர். கடந்த 18ம் தேதி கணக்கிலிருந்து அவசரமாக சுமார் 1 கோடி வரை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 19ம் தேதி ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்று காலை 2வது நாளாக சுமார் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெற வங்கியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  அச்சப்பட வேண்டாம்: வங்கி மேலாளர் மாரியப்பன் கூறுகையில், ‘கேஒய்சி எனப்படும் வங்கி வாடிக்கையாளர் விபரம் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பது நடைமுறை. அதன்படி ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு முடக்கப்பட மாட்டாது. ஆனால் வாடிக்கையாளர்கள், நிபந்தனையில் 4வதாக குறிப்பிட்டுள்ள என்ஆர்பி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் இணைக்காவிட்டால் வங்கி சேவை முடங்கி விடும் என்ற அச்சத்தில் பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். அச்சப்பட தேவையில்லை என்றார்.


Tags : Customers ,panic ,NPR , NPR letter, account freeze, customers
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!