×

ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது திட்டம்: போலி பில் போட்ட நிறுவனங்கள் இன்புட் வரி கிரெடிட் பெற தடை: நிதியமைச்சகம் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: போலி பில் போட்டு வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள், இன்புட் வரி கிரெடிட் (உள்ளீட்டு வரி வரவு) பெறுவதற்கு, நிதியமைச்சகம் தடை செய்ய தொடங்கியுள்ளது.  ஜிஎஸ்டி மாதாந்திர சராசரி வரி வசூல் இலக்கு 1 லட்சம் கோடி என நிர்ணயித்திருந்த மத்திய அரசு, கடந்த டிசம்பரில் இந்த இலக்கை 1.1 லட்சம் கோடியாக உயர்த்தியது. இந்த இலக்கு மீண்டும் உயர்த்தப்பட்டு, நடப்பு நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில் 3.55 லட்சம் கோடி வசூலிக்க திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி வசூல் சரிவதற்கு வரி ஏய்ப்பு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. போலி பில் போட்டு வரி ஏய்ப்பு செய்வதோடு, இன்புட் வரி கிரெடிட் (உள்ளீட்டு வரி வரவு) பெறுவதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வசூலை அதிகரிக்கும் முயற்சியாக, நிதியமைச்சகம் புதிய அதிரடி திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

 இதன்படி, போலி பில் போட்டு வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள், இன்புட் வரி கிரெடிட் பெறுவதற்கு தடை செய்யப்பட்டு வருகின்றன. அதாவது, உற்பத்தியாளர்கள் தாங்கள் வாங்கிய மூலதன பொருட்களுக்கு வரி செலுத்தியிருப்பார்கள். அதை வரி கிரெடிட்டாக பெற்றுக்கொள்ளலாம்.   இதுபோல், உற்பத்தி செய்யப்பட்ட பொருளை வாங்கி மறு விற்பனை செய்யும் டீலர்களும், அந்த பொருட்கள் மீது ஏற்கெனவே செலுத்தப்பட்ட வரியை, இன்புட் வரி கிரெடிட்டாக பெறலாம். இதற்கு இன்வாய்ஸ் பில்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் சில நிறுவனங்கள் போலியாக பில் தயாரித்து, அவற்றை சமர்ப்பித்து வரி கிரெடிட் பெறுகின்றன.  இதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் புதிய திட்டத்தை நிதியமைச்சகம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில், ஒவ்வொரு மண்டல அலுவலகமும், தங்கள் பகுதிகளில் போலி இன்வாய்ஸ் பில் போட்டு வரி கிரெடிட் பெற்ற நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

அந்த நிறுவனங்கள் இன்புட் வரி கிரெடிட் பெறுவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதற்காக, அவற்றின் ஜிஎஸ்டிஎன் விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இன்புட் வரி கிரெடிட் பெற தடை விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனங்களால் வரி வசூல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுபோல், வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களுக்கு இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது என அவர்கள் கூறினர்.

வரி ஏய்ப்பு எவ்வளவு?
* 2017 ஜூலை 1ம் தேதியில் இருந்து கடந்த 2018 மார்ச் 31 வரை வரி ஏய்ப்பு தொடர்பாக 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 750 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 2018-19 நிதியாண்டில் வரி ஏய்ப்பு செய்வோர் எண்ணிக்கை 1,473 ஆக உயர்ந்துள்ளது. இவர்களிடம் இருந்து 20,000 கோடி வசூலிக்கப்பட்டுளளது.
* நடப்பு நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை 1,000 வரி ஏய்ப்பு வழக்குகள் பதியப்பட்டு 8,000 கோடி மீட்கப்பட்டுள்ளது என ஜிஎஸ்டி இயக்குநரக புள்ளி விவரத்தின் மூலம் தெரிந்துள்ளது.
* ஜிஎஸ்டி வசூல் இலக்கை அதிகரிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
* நடப்பு நிதியாண்டின் கடைசி 3 மாதத்தில் 3.55 லட்சம் கோடி வசூலிக்க திட்டமிட்டுள்ளது.



Tags : GST collections, new scheme, duplicate bill, finance ministry
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...