ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கு தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது.  மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதாயம் கொடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது. மேலும், இவர்கள் வெளிநாடுகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் பணத்தை போட்டு மலேசியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் அமலாக்கத்துறை கூறியது. இங்குள்ள ரூ.54 கோடி மதிப்பிலான கார்த்தியின் சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த 2018ம் ஆண்டு முடக்கியது.

Advertising
Advertising

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தை ஏற்கனவே கைது செய்திருந்தது. அவரிடம் கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன்பின் இந்த வழக்கில் சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அடுத்தடுத்து கைது செய்தது. இதனால் அவர் டெல்லி திகார் சிறையில் 100 நாட்கள் இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை டெல்லியில் நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணையில் புதிதாக கிடைத்த தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி கேட்கப்பட்டது அவரது வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி பதிவு செய்தார்.

Related Stories: