முசாபர்பூர் காப்பக பலாத்கார வழக்கு முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் உள்பட 19 பேர் குற்றவாளிகள்: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: முசாபர்பூர் காப்பகத்தில் நடந்த சிறுமிகள் பலாத்கார வழக்கில், முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 28ம் தேதி வழங்கப்பட உள்ளது.

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் காப்பகம் ஒன்றில் பல சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாயினர். இந்த காப்பகத்தை பீகார் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர் நடத்தி வந்தார். காப்பகத்தில் தங்கியிருந்த பல சிறுமிகள் பலாத்காரத்துக்கு ஆளாகியிருந்தது டாடா இன்ஸ்ட்டியூட் ஆப் சோசியல் சயன்ஸ் நிறுவனம் சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில், காப்பகத்தில் தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டது 2018ல் உறுதியானது. இதுதொடர்பாக அம்மாநில அரசிடமும் அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் அரசு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், காப்பகத்தில் பணிபுரிந்தோர், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும், வழக்கு விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதற்காக பீகாரில் இருந்து டெல்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், காப்பகத்தின் உரிமையாளரான பிரிஜேஷ் தாக்கூர் உள்ளிட்ட 19 பேர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்தார். ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார். இவர்களுக்கான தண்டனை வரும் 28ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: