மேற்குவங்க மாநிலத்தில் இருந்து யெச்சூரியை மாநிலங்களவைக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் தீவிரம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்திலிருந்து காங்கிரஸ் உதவியுடன், சீதாராம் யெச்சூரியை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் தலைமை ஆர்வமாக உள்ளது. மாநிலங்களவையில் மோடி அரசுடன், மோத சரியான நபர் யெச்சூரிதான் என மார்க்சிஸ்ட் கருதுகிறது. மாநிலங்களவையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தவர் சீதாராம் யெச்சூரி. இவர் கடந்த 2017ம் ஆண்டே மீண்டும் மாநிலங்களவைக்கு காங்கிரஸ் உதவியுடன் அனுப்ப அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு அளித்தார். ஆனால் 3 முறை மாநிலங்களவை எம்.பி.யாக ஒருவரை நியமிக்கக் கூடாது என்ற கட்சி விதிமுறையை காரணம் காட்டி மார்க்சிஸ்ட் தலைமை மறுத்துவிட்டது. மேற்குவங்க சட்டப்பேரவையில் தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் கட்சிக்கு 4 மாநிலங்களவை எம்.பிக்கள் கிடைக்கும். மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆதரவில் ஒருவரை அனுப்பலாம்.

மாநிலங்களவையில் மோடி அரசுடன், வலுவாக வாதம் செய்ய சரியான நபர் சீதாராம் யெச்சூரிதான் என அக்கட்சியின் தலைமை கருதுகிறது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘அசாதாரண சூழ்நிலைகளால், அசாதாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. நாடு மோசமான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசின் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வலுவான குரல் நமக்கு தேவை. அதற்கு யெச்சூரியை விட சிறந்த நபர் யாரும் இல்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. என்ன நடக்கிறது என பார்ப்போம்’’ என்றார்.

Related Stories: