தேர்தல் நிதி பத்திரத்துக்கு தடை விதிக்கலாமா? மத்திய அரசு, தேர்தல் ஆணையம் 2 வாரத்தில் பதில் தர வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  தேர்தல் நிதி பத்திரத்துக்கு தடை விதிக்க கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.காவி, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். தேர்தல் நிதி பத்திரங்களானது, கணக்கிடப்படாத கருப்பு பணத்தை அரசியல் கட்சிக்கு ஆதரவாக மாற்றுவதற்கான வழிமுறையாக உள்ளது என விமர்சித்தார். இதேபோல் தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜரானார்.

அவர் தனது வாதத்தில், ‘‘தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிப்பதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தேர்தல் நிதி பத்திரத்துக்கு தடை விதிக்க முடியாது. மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம், தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு தடை விதிக்க கோரும் மனு தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Related Stories: