நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் குப்தாவின்  மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வெளியே தள்ளிவிடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக பலாத்காரம், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்குமார் என்ற முக்கிய குற்றவாளி, சிறையிலேயே தற்கொலை செய்துக் கொண்டான். மற்றொருவன், 17 வயதுக்கு உட்பட்டவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்டான். இந்நிலையில், மீதமுள்ள 4 குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங் (23), பவன்குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய்குமார் சிங் (31) ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இவர்களுக்கு வரும் பிப்.1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் குற்றவாளிகள், மேல்முறையீடு, கருணை மனு என்று ஒவ்வொன்றாக தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த வகையில், குற்றவாளி பவன் குமார் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘குற்றம் நடந்தபோது நான் 17 வயதுக்கு உட்பட்டவன். இதனால் சிறார் தண்டனைச் சட்டத்தின் கீழ் தான் எனக்கு தண்டனை விதிக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.  இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி காவல் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘‘குற்றவாளி பவன் குமார் சம்பவம் நடந்தபோது சிறுவன் அல்ல. இதற்கு முக்கிய ஆதாரம், அவனது பிறப்பு சான்றிதழ்தான்’’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஏற்கனவே இந்த மனு, மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகியும், மீண்டும் அதே கோரிக்கையை இங்கு கொண்டு வந்தது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பி, அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் பவன் குமாரின் தூக்கு தண்டனை உறுதியாகி உள்ளது.

Related Stories: