×

இந்தியாவில் உள்ள 1% பணக்காரர்களின் சொத்து அளவு: 70% ஏழைகளைவிட 4 மடங்கு அதிகம்: ஆக்ஸ்பம் அறிக்கையில் தகவல்

டாவாஸ்: இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் சொத்து, 70% ஏழைகள் வைத்திருக்கும் சொத்தை விட 4 மடங்குக்கும் அதிகமானது என்று ஆக்ஸ்பம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யுஇஎப்) 50வது ஆண்டுக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு ‘கவனிக்க வேண்டிய நேரம்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை ஆக்ஸ்பம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* உலகத்தில் உள்ள 2,153 கோடீஸ்வரர்கள், உலக மக்கள் தொகையில் 60 சதவீதமாக இருக்கும் 4.6 பில்லியன்(460 கோடி) மக்களைவிட அதிக சொத்து வைத்துள்ளனர்.
* இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பெரும் பணக்காரர்கள், 70 சதவீத ஏழைகள் (95 கோடி பேர்)  வைத்திருக்கும் சொத்தை விட 4 மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர்.
* இந்தியாவில் உள்ள 63 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, இந்தியாவின் 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டான 24 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடியைவிட அதிகமாக உள்ளது.
* பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்தாண்டை விட இந்தாண்டு சற்று குறைந்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆனாலும் பணக்காரர்-ஏழை இடையிலான இடைவெளி மிக அதிகமாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளன. இந்த சமநிலையற்ற தன்மை பற்றி விரிவாக ஆலோசிக்காமல், பணக்காரர்-ஏழை இடையிலான இடைவெளியை தீர்க்க முடியாது.சாதாரண மக்கள் குறிப்பாக பெண்களின் செலவினங்களில்தான் பெரும் பணக்காரர்கள் அதிகளவில் சொத்துக்களை குவிக்கின்றனர்.
* வருமானம் மற்றும் பாலின சமநிலையற்ற தன்மை குறித்து உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஒரு தொழில்நுட்ப கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஓராண்டு வாங்கும் சம்பளத்தை, வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் சம்பாதிக்க 22 ஆயிரத்து 277 ஆண்டுகள் ஆகும். வீட்டு வேலை செய்யும் பெண் ஒரு ஆண்டில் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக தொழில்நுட்ப கம்பெனியின் சிஇஓ 10 நிமிடத்தில் சம்பாதிக்கிறார். அவரது சம்பளம் வினாடிக்கு 106 ஆக உள்ளது.
* வீட்டில் சமைப்பது, சுத்தப்படுத்துவது, குழந்தைகளை மற்றும் முதியோர்களை கவனிப்பது என இந்தியாவில் உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் பணம் ஏதும் பெறாமல் பணியாற்றுகின்றனர். இதை மதிப்பிட்டால், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு இவர்களது பங்களிப்பு ஆண்டுக்கு ₹19 லட்சம் கோடியாக இருக்கும். இது இந்தியாவின் 2019ம் ஆண்டு கல்வி பட்ஜெட்டான 93 ஆயிரம் கோடியைவிட 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
* உலகளவில் பெண்கள் சம்பளம் பெறாமல் ஒவ்வொரு நாளும் 12.5 பில்லியன் மணி நேரம் பணியாற்றுகின்றனர். உலக பொருளாதாரத்துக்கு இவர்களின் பங்களிப்பு ஒராண்டுக்கு 10.8 டரில்லியன் டாலர்.
* பெரும் பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேரை, தங்கள் சொத்து மதிப்பில் 0.5 சதவீதத்தை கூடுதல் வரியாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு வழங்கினால் அது, 117 மில்லியன் வேலை வாய்ப்புக்கு தேைவயான முதலீட்டுக்கு சமமான தொகையாக இருக்கும்.
இவ்வாறு அதில் பல கணக்கீடுகள் மற்றும் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஆகஸ்பம் அறிக்கை குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘‘இந்தியாவின் ஏழைகளிடமிருந்து பணத்தை பறித்து தனது முதலாளி நண்பர்களுக்கு பிரதமர் மோடி வழங்குகிறார். இந்த மிகப் பெரிய அதிகார புரோக்கர்களை சார்ந்துதான் அவர் உள்ளார். இந்தியாவின் ஒரு சதவீத பெரும் பணக்காரர்கள், 100 கோடி ஏழைகளைவிட 4 மடங்குக்குக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

Tags : Oxfam ,India ,poorest ,poor , India, 1% Rich, Property, Oxfam Report
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...