×

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட மத்திய அரசு அறிவிப்பாணையை நிறுத்தி வைக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பிரதமருக்கு கடிதம்

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட மத்திய அரசு அறிவிப்பானையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2006ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி கடல், நில பகுதிகளில் கேஸ், எண்ணெய் எடுப்பது மற்றும் உற்பத்தி, வளர்ச்சி ஆகியவை ஏ பிரிவுகளில் இருந்தது. ஆனால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், ஆழ்துளை, கடல், கிணறுகளில் கேஸ், ஆயில் எடுப்பது குறித்து கடந்த ஜன.16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை 2006க்கு மாறாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடல் பகுதி, நிலப்பகுதிகளில் கேஸ், எண்ணெயம் உற்பத்தி மற்றும் விரிவாக்கத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை.

பொதுக்களிடம் கருத்துக்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடிதம் எழுதியிருந்தேன். அதில், இந்த திட்டம் கொண்டு வருவதற்கு முன்பு அரசு மற்றும் பொதுமக்கள், நிபுணர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இது முழுக்க விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். தற்போது தாங்கள் கொண்டு வந்துள்ள அறிவிப்பாணை மூலம் கேஸ், எண்ணெய் எடுப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்பது விவசாயிகள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் பெரும்பகுதி காவிரி டெல்டா மாவட்டங்களில் அமைந்துள்ளது. காவிரி டெல்டா பகுதி பசுமை பகுதியாக உள்ளது. எனவே, இந்த திட்டத்துக்கு அறிவிப்பாணைக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தை டெல்டாவில் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் இந்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பாணை அதற்கு எதிர்மாறாக உள்ளது. தாங்கள் கடந்த 16ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை முறைப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கும், மாநில அரசுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், அது போன்ற எந்த நடைமுறையும் கடைபிடிக்கப்படவில்லை.

எனவே, இந்த அறிவிப்பாணை எந்த நிலையில் நீடித்ததோ அதே நிலை காவிரி டெல்டா பகுதியில் தொடர வேண்டும். கடந்த 2006ல் வெளியிடப்பட்ட அறிவிப்பானையை இந்த டெல்டா மண்டலத்தில் மீண்டும் பின்பற்ற வேண்டும். கடந்த 16ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை நிறுத்தி வைக்க வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அறிவிப்பாணையின் படி தேசியச்சுற்றுச்சூழல் துறை அனுமதி, பொதுமக்களிடம் கலந்தாய்வு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். எனவே, இந்த டெல்டா பகுதியை பி பிரிவில் இருந்து மீண்டும் ஏ பிரிவுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : government ,CM Edappadi ,Central ,Edappadi , ஹைட்ரோ கார்பன் திட்டம் , மத்திய அரசு ,முதல்வர் எடப்பாடி ,பிரதமர்
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...