ஆஸி. ஓபன்: 2வது சுற்றில் ஒசாகா: ஜோகோவிச் முன்னேற்றம்

மெல்போர்ன்1: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்) தகுதி பெற்றார். முதல் சுற்றில் செக் குடியரசின் மேரி பவுசோகாவுடன் நேற்று மோதிய ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் லெசியா சுரென்கோவை (உக்ரைன்) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), பெத்ரா குவித்தோவா (செக்.), வோஸ்னியாக்கி (டென்மார்க்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். வீனஸ் வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் 15 வயது சிறுமி கோரி காப்பிடம் 6-7 (5-7), 3-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Advertising
Advertising

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-5), 6-2, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லெனார்டு ஸ்டிரப்பை போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை எளிதாக வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), மேட்டியோ பெரட்டினி (இத்தாலி), சாம் குவெரி (அம்ரிக்கா), கோல்ஸ்கிரைபர் (ஜெர்மனி) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். கனடா வீரர் டெனிஸ் ஷபோவலாவ் (13வது ரேங்க்) 3-6, 7-6 (9-7), 1-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் மார்டன் புக்சோவிக்சிடம் (ஹங்கேரி) போராடி தோற்றார்.

Related Stories: