கட்டணம் செலுத்த அவகாசம் கோரி ஏர்டெல், வோடபோன் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: ஏஜிஆர் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரி, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளன. ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். அதோடு, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றை பயன்பாட்டுக்கான கட்டணம், ஈவுத்தொகை மற்றும் சொத்து வருமானம் உள்ளிட்டவை சரிகட்டப்பட்ட நிகர வருவாயாக கணக்கிடப்பட்டு, அதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  இதன்படி, வோடபோன் நிறுவனம் ரூ.53,039 கோடி, ஏர்டெல் ரூ.35,586 கோடி மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

இதுபோல் டாடா டெலசர்வீசஸ் ரூ.13,823 கோடி செலுத்த வேண்டும். அதாவது இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை கடந்த 16ம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அரசுக்கு 23ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கூட்டாக மனு தாக்கல் செய்தன. அதில், மத்திய அரசுக்கு தாங்கள் தாக்கல் செய்ய வேண்டிய கட்டணத்தை செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியுள்ளன. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Related Stories: