×

மசூதியில் இந்து முறைப்படி திருமணம்: மத நல்லிணக்கத்தால் பொதுமக்கள் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் அருகே சேராப்பள்ளி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி பிந்து. இவர்களுக்கு அஞ்சு என்ற மகள் உள்ளார். கூலி தொழிலாளியான அசோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இதனால் பிந்து வறுமையால் தவித்து வந்தார். இந்தநிலையில் தனது மகள் அஞ்சுவின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய கவலையும் அவரை வாட்டி வதைத்தது. பட்டதாரியான அஞ்சுவிற்கு வரன் பார்க்க போதிய வசதியில்லாததால் அவளது திருமணம் தள்ளி போய் கொண்டே இருந்தது.

இந்தநிலையில் பிந்துவின் உறவினர்களின் ஆலோசனைபடி, அப்பகுதியில் உள்ள ஜூம்மா மசூதி நிர்வாகிகளிடம் பிந்து ஒரு மனு அளித்தார். அதில் தனது மகள் அஞ்சுவிற்கு திருமணம் நடத்த போதிய பண வசதி இல்லை. தாங்கள் இத்திருமணத்தை நடத்தி தரும்படி வேண்டுவதாக குறிப்பிட்டிருந்தார். மனுவை பரிசீலித்த நிர்வாகிகள், பிந்துவை அழைத்து அஞ்சுவிற்கு வரன்பார்க்கும் படி தெரிவித்தனர். அதோடு மசூதி சார்பில் 10 பவுன் நகையும், ரூ.2 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுப்பதாகவும், மேலும் திருமண செலவுகளை மசூதி நிர்வாகிகள் ஏற்று கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து பிந்து நிம்மதி பெருமூச்சுடன் அஞ்சுக்கு வரன் பார்க்க துவங்கினார். அதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சரத் என்ற வாலிபரை அஞ்சுவிற்கு பேசி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சேராப்பள்ளி ஜூம்மா மசூதி வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. அஞ்சுவிற்கான திருமண அழைப்பிதழ் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அஞ்சு-சரத் திருமணம் நேற்று சேராப்பள்ளி ஜூம்மா மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி நடந்தது. அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.

திருமண உணவுக்கான செலவினை ஜூம்மா மசூதி செயலாளர் நிஜூமுதீன் தலைமையிலான நிர்வாகிகள் ஏற்றிருந்தனர். ஜூம்மா மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி நடந்த திருமணம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags : Hindu Formal Marriage: Religious Reconciliation by the Public Etiquette , Mosque, Hindu, Marriage
× RELATED கேரளாவில் பள்ளிவாசலில் இந்து...