உரிமையாளரை காப்பாற்ற பாம்பை கடித்து குதறி கொன்ற வளர்ப்பு நாய்கள்: கோவை அருகே பரபரப்பு

கோவை: கோவை அருகே உரிமையாளர் செல்லும் வழியில் குறுக்கிட்ட 6 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறி கொன்றன. கோவை அருகே ஒத்தக்கால்மண்டபம் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது வீட்டை ஒட்டியே இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக தனது நண்பருடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இவர்களுடன் ராமலிங்கம் வளர்த்து வரும் 3 நாய்களும் சென்றுள்ளன. அப்போது இவர்கள் செல்லும் வழியில் சுமார் 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு வந்துள்ளது.

Advertising
Advertising

பாம்பை கண்ட அச்சமடைந்த ராமலிங்கமும், அவரது நண்பரும் பின்வாங்கியுள்ளனர். இதைக்கண்ட 3 வளர்ப்பு நாய்களும் கண் இமைக்கும் நேரத்தில் பாம்பின் மீது பாய்ந்தன. பாம்பை சுற்றி வளைத்து மாறி மாறி கடித்து குதறி கொன்றன. இந்த காட்சிகளை ராமலிங்கத்துடன் வந்த நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். வளர்ப்பவருக்கு ஒரு ஆபத்து என்றதும், கணநேரத்தில் உடனடியாக செயல்பட்டு பாம்பை கடித்து குதறிய நாய்களின் செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: