மார்த்தாண்டம் அருகே பரபரப்பு: மாஜி தலைமை ஆசிரியர் அடித்து கொலை... சடலம் குளத்தில் வீச்சு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை ஆயிரம்தெங்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(65). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி வசந்தகுமாரி. தம்பதிக்கு பிஜூ(41) என்ற மகனும், சோஜா(39), அனிஷா என்ற மகள்களும் உள்ளனர். பிஜூவுக்கு திருமணம் முடிந்து ஷைனி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(35). கடந்த 2003ல் அப்பகுதியில் உள்ள தாணிமூடு இசக்கி அம்மன் ேகாயிலுக்கு காணிக்கை பெட்டி வைத்துள்ளனர். இது செல்வராஜின் சொத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டது. இது தொடர்பாக செல்வராஜுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து செல்வராஜ் மற்றும் அவரது தம்பி குமார் ஆகியோர் அந்த காணிக்கை பெட்டியை அடித்து உடைத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் கிருஷ்ணகுமார், அவரது தம்பி சிவகுமார்(30), அண்ணன் மகன்கள் அபினாஷ், அஸ்வின்(21) உட்பட 4 பேர் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது செல்வராஜ் வீட்டருகே நின்றுள்ளார். அங்கு வந்த 4 பேருக்கும், செல்வராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தகராறு முற்றி அடிதடியாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். செல்வராஜுவுக்கு ஆதரவாக அவரது தம்பி குமாரும் வந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணகுமார் உட்பட 4 பேரும் சேர்ந்து செல்வராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் செல்வராஜ் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரிகிறது. பின்னர் சடலத்தை அருகில் உள்ள பெருங்குளத்தில் வீசிவிட்டு 4 பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் குமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சமூக சேவகர் ராஜகோபால் துணையுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கிருஷ்ணகுமார் தலையில் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. போலீசார் அவரையும், அபினாஷையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிவகுமார் மற்றும் அஸ்வினை தேடி வருகின்றனர்.

Related Stories: