மானாமதுரை பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?... விவசாயிகள் எதிர்பார்ப்பு

மானாமதுரை: மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் கடனை கட்ட வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்றுவருகின்றனர். எனவே நெல்கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் கடந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியது. இந்தாண்டு பருவமழை பெய்ததால் 90 சதவீத நஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி நடந்தது.

கண்மாய் பாசனம், கிணற்று பாசனம், ஆற்றுபாசனம் மூலம் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் தாலுக்காக்களில் இந்தாண்டு ஏராளமான இடங்களில் நெற்பயிர்கள் விளைந்துள்ளன. விளைந்த நெல்லை இயந்திரங்கள் மூலம் அறுத்த விவசாயிகள் அவற்றை வயல்களிலும், தோட்டங்களிலும், வீட்டு முகப்பிலும் அடுக்கி வைத்துள்ளனர். சில நாட்களாக மானாமதுரை வட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் நெல் மூடையை குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாய சங்க மாநில துணைத்தலைவர் ராமமுருகன் கூறுகையில்,‘‘ மானாமதுரை வட்டாரத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் நெல்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு 40 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது. ஆனால் இதுவரை இங்கு நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. செய்களத்தூர் பகுதியில் விளைந்த நெல்மூட்டைகளை அவசர தேவைக்காக சில விவசாயிகள் வியாபாரிகளிடம் 65 கிலோ நெல்மூடையை ரூ.700க்கு விற்று வருகின்றனர். இதனால், வியாபாரிகள் லாபமடைந்து வருகின்றனர்.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் சேமித்து வைத்துள்ள தங்களது நெல்லை 65 கிலோ நெல்மூடையை ரூ.1200க்கு விற்க முடியும். இதனால் பல மாதங்கள் மழை, கடும்பனியில் பாடுபட்ட விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் என்பதால் மானாமதுரை ஒன்றியத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 24 இடங்களிலும் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>