10 ஆண்டு இழுபறிக்கு பின் மதுரை- போடி அகல ரயில் பாதை பணி உசிலம்பட்டி வரை முடிந்தது: 23ம் தேதி முதல் சோதனை ஓட்டம்

மதுரை: மதுரை-போடி அகல ரயில் பாதை பணி 10 ஆண்டு இழுபறியாக நீடித்து உசிலம்பட்டி வரை முடிந்துள்ளது. இந்த பாதையில் வரும் 23ம் தேதி முதல் 2 நாள் சோதனை ஓட்டம் நடத்தி பயணிகள் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது. மதுரை-போடி இடையே 10 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்கேஜ் பாதையில் ரயில் ஓடி கொண்டு இருந்தது. இதை அகலப்பாதையாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த 2010 டிசம்பர் 3ல் ரயில்கள் நிறுத்தப்பட்டு, தண்டவாளம் அகற்றப்பட்டது. அதன் பிறகு அகலபாதை அமைக்கும் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி யானைப்பசிக்கு சோளப்பொறியானது. இதனால் பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.

Advertising
Advertising

ஆண்டுக்கு ஆண்டு திட்ட மதிப்பீடு ஏறிக்கொண்டே போனது. கடைசியாக 2018ல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின்படி மதுரை-போடி இடையே 90 கி.மீ. தூர பாதையில் 8 பெரிய பாலம், 190 சிறிய பாலங்கள் கட்ட ரூ.300 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2 பெரிய பாலங்கள், 70 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. செக்கானூரணியில் ரயில்வே ஸ்டேஷன் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

2020 ஏப்ரல் இறுதிக்குள் தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு பயணிகள் ரயில் இயக்க தேவையான அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வே உயர் அதிகாரிகள் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தி திருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுரை-உசிலம்பட்டி இடையே வரும் 23ம் தேதி டிராலி ஓட்டமும்,  24ம் தேதி ரயில் சோதனை ஓட்டமும் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் நடக்கிறது.

இதில் தடையில்லா சான்றிதழ் அளிக்கப்பட்டு திருப்தி அளித்த பிறகு, இந்த பாதையில் முதற்கட்டமாக பயணிகள் ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே துறை முடிவு செய்ய உள்ளது. 37 கி.மீ. பணிகள் முடிக்க 10 ஆண்டு இழுத்துள்ளது.

உசிலம்பட்டியில் இருந்து  முதல் போடி வரை 53 கி.மீ. தூரம் பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. இதற்கு எத்தனை ஆண்டுகள் இழுக்குமோ?. ஏனென்றால் உசிலம்பட்டியை அடுத்து ஆண்டிபட்டி கணவாயில் மலை குறுக்கிடுகிறது. இதிலுள்ள மீட்டர்கேஜ் பாதையை அகலபாதையாக்க இரு பக்கமும் மலையை உடைத்து அகலப்படுத்த வேண்டி உள்ளது.

இந்த பணிக்கு பிப்ரவரியில் தாக்கலாகும் மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஒதுக்கீட்டை பொறுத்து, பணியில் வேகம் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்டபணி பணி முடிக்கப்பட்ட மதுரை- உசிலம்பட்டி இடையே பயணிகள் ரயில் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து பிப்ரவரி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ாப்பு எழுந்துள்ளது.

Related Stories: