சாதி சான்றிதழ் வழங்க கோரி கோயிலில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்: காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி: சாதி சான்றிதழ் வழங்க கோரி பள்ளிக்கு செல்ல மறுத்து மாணவ, மாணவிகள் கோயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணி பகுதியில் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வருகின்றன. இங்கு வசிப்போரின் குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றன. காட்டுநாயக்கர் சமூக மக்கள் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertising
Advertising

ஆனால் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. சாதி சான்றிதழ் வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாதி சான்றிதழ் வழங்க கோரி மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந்துரை செய்ததையடுத்து மானுடவியல் வல்லுநர் குழு கடந்த சில வருடங்களுக்கு முன்பு காரைக்குடியில் ஆய்வு செய்தது. ஆனாலும் சாதி சான்றிதழ் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 15 முதல் நேற்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டன.

5 நாள் விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. செஞ்சை பாப்பா ஊரணி பகுதியை சேர்ந்த காட்டு நாயக்கர் இன மாணவ-மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளிக்கு செல்லாமல் இங்குள்ள மாரியம்மன் கோயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். தகவலறிந்து காரைக்குடி தாசில்தார் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படாததால் காலை 8 மணிக்கு துவங்கிய போராட்டம் 11 மணி வரை நீடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க கோரி 15 வருடத்திற்கும் மேலாக போராடி வருகிறோம். பிற மாவட்டங்களில் எங்கள் சாதியினருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கி வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மறுக்கப்படுகிறது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories: