×

இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்கள் மற்றும் சுயதொழில் செய்வோரின் தற்கொலை அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்கள் மற்றும் சுயதொழில் செய்வோரின் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல் வெளியாகியுள்ளது. 2018ம் ஆண்டில் நடைபெற்றுள்ள குற்றங்கள் தொடர்பான அந்த புள்ளி விவரத்தில், ஒட்டுமொத்தமாக 2018ம் ஆண்டில் ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017ம் ஆண்டைவிட 3.6% அதிகம். இதில் மராட்டிய மாநிலம் முதலிடத்திலும் (17,972 பேர்), தமிழ்நாடு 2ம் இடத்திலும் (13,896 பேர்), மேற்குவங்கம் 3ம் இடத்திலும் (13,225 பேர்), மத்தியபிரதேசம் 4ம் இடத்திலும் (11,775 பேர்), கர்நாடகம் 5ம் இடத்திலும் (11,561 பேர்) உள்ளது.

இந்த 5 மாநிலங்களிலேயே நாட்டின் பாதி தற்கொலைகள் (50.9%) நடைபெற்றுள்ளது. 2018ம் ஆண்டு சராசரியாக தினமும் வேலை இல்லாதவர்கள் 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர். அந்த ஆண்டில் வேலை இல்லாதவர்கள் 12,936 பேரும்(9.6%), சுயதொழில் செய்வோர் 13,149 பேரும்(9.8%) தற்கொலை செய்துள்ளனர். விவசாய துறையில் 10,349 பேர்(7.7%) தற்கொலை செய்துள்ளனர். இதில் 5,763 பேர் விவசாயிகள், 4,586 பேர் விவசாய தொழிலாளர்கள். தற்கொலை செய்த விவசாயிகளில் பெண்கள் 306 பேர், விவசாய தொழிலாளர்களில் பெண்கள் 515 பேர். தற்கொலை செய்த பெண்கள் 42,391, இவர்களில் 22,937 பேர் (54.1%) குடும்பத் தலைவிகள். அரசு ஊழியர்கள் 1,707 பேர்(1.3%), தனியார் நிறுவன ஊழியர்கள் 8,246 பேர்(6.1%), பொதுத்துறை ஊழியர்கள் 2,022 பேர் (1.5%), மாணவர்கள் 10,159 பேர்(7.6%) தற்கொலை செய்துள்ளனர், என கூறப்பட்டுள்ளது.Tags : Suicides ,India ,Suicide Than Farmers , India, Farmers, Unemployed, Self-employed, Suicide, National Crime Archives
× RELATED தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா...