மக்கள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டாதது ஏன்?: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி

தூத்துக்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் மக்கள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டாதது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மக்கள் கருத்தை கேட்காதது வருத்தமளிப்பதாகவும் அவர், தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்திருந்த கனிமொழி, செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு பேசினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் தொடர்ந்து வலுவாக எதிர்த்து வந்தாலும் அதை மத்திய அரசு செயல்படுத்த நினைப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் கூட அரசாங்கம் மக்களுடைய கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சுற்றுப்புற சூழலை பற்றி தங்களுக்கு அக்கறை இல்லை என்ற முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.

Advertising
Advertising

மேலும் விவசாயம் மற்றும் விவசாயிகளை முற்றிலுமாக தமிழ்நாட்டில் அழித்துவிட கூடிய திட்டங்களை ஆளும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் கொடுக்கும் மத்திய அரசு நாட்டையே தனியார் மையமாக்க முயற்சிக்கிறது என்றும் கனிமொழி குற்றம்சாட்டினார். ஏற்கனவே தனியார் துறைகளில் ஆட்குறைப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரயில்வேத்துறை தனியார் மையமாக்கினால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்று அவர் கூறினார். மேலும் பாஜக ஆட்சியில் விவேகானந்தருக்கு காட்டும் அக்கறையை திருவள்ளுவருக்கு காட்டவில்லை என குற்றம்சாட்டிய கனிமொழி, விவசாயத்தை அழிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்த மக்கள் நலனில் தமிழக அரசு அக்கறை செலுத்தாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Stories: