தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கான விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை:   தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.  விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் மொழியின் எல்லாச் சொற்களையும் ஒரே நிரலில் கற்பதற்கு சொற்குவைத் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.  பின்னர் குட்டி கதை ஒன்றை தெரிவித்து, தமிழ் அறிஞர்கள் காத்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கான திறமை அங்கீகரிக்கப்பட்டு உரிய விருது அளிக்கப்படும் என்றார். இதையடுத்து 9 பேருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதும், 13 பேருக்கு சித்திரை தமிழ் புத்தாண்டு விருதும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும், 3 பேருக்கு உலக தமிழ்ச்சங்க விருதும், முதலமைச்சர் வழங்கினார்.

இதேபோல் 5 பேருக்கு மரபுவழி கலைவல்லுநருக்கான விருதும், 5 பேருக்கு நவீனபாணி கலைவல்லுநருக்கான விருதும், 7 பேருக்கு நூல்கள், நாட்டுடமை, பரிவுத்தொகை விருதும் வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார். முன்னதாக விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் மொழியின் மகுடமாய்த் திகழும் திருக்குறளின் பெருமைகளையும் எடுத்துரைத்தார்.  தமிழின் அனைத்துச் சொற்களையும் ஒரே இடத்தில் கற்கும் விதத்தில் தமிழ்குவை திட்டத்தை தனது அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.  நிறைவாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று திருக்குறளின் பெருமையை ரத்தினச் சுருக்கமாக எடுத்துச் சொன்னார்.  பின்னர் விழாவில் விருதுகளுடன் சேர்த்து அவர்களுக்குரிய பரிசுத் தொகைக்கான காசோலை, ரொக்கப்பரிசு, தங்க பதக்கம் உள்ளிட்டவையும் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.  விழா நிறைவடைந்ததும் விருது பெற்ற அனைவரும் முதலமைச்சருடன் சேர்ந்து குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

Related Stories: