×

மதுரையில் நடைபெற்ற சுயமரியாதை இணையேற்பு விழா: NO CAA, NO NRC என கைகளில் மருதாணி வைத்த மணப்பெண்

மதுரை: மதுரையில் நடைபெற்ற சுயமரியாதை இணையேற்பு விழாவில், மணப்பெண் தன் மருதாணிக் கரங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை  திருத்தச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் குடியுரிமை  திருத்தச்சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரம், பரிமளா தம்பதியரின் மகள் மருத்துவர் ப.மீ.யாழினி. தஞ்சை கருணாநிதி, மீனா தம்பதியரின் மகன் பொறிஞர் க.செயன்நாதன். யாழினி - செயன்நாதன் ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா  மதுரை ஐராவதநல்லூரில் நேற்று நடந்தது. பெரியாரிய முறைப்படி நடந்த இந்த சாதி மறுப்புத் திருமணத்துக்கு திராவிடர் கழக பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி தலைமை வகித்தார். இன்று முதல் எங்கள் வாழ்வில் நிகழும்  இன்பம் துன்பம், நன்மை தீமை ஆகிய நிகழ்ச்சிகள் யாவும் எங்கள் இருவருக்கும் சம உரிமையுள்ள பொது நிகழ்ச்சியேயாகும். வாழ்க்கையில் நான் என்னென்ன உரிமைகளை எதிர் பார்க்கிறேனோ, அவ்வளவும் என்னிடமிருந்து அவரும்  எதிர்பார்க்க உரிமையுண்டு என்கிற இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் அறிகுறியாக இந்த மலர் மாலையை மணமகன், மணமகளுக்கு அணிவிக்கிறேன் என்ற உறுதிமொழியை இருவரும் சொல்லி மாலை மாற்றிக் கொண்டார்கள்.

இதற்கிடையே, திருமணத்தின்போது, மணமகள் மற்றும் உறவினர்கள் தங்கள் கைகளில் மருதாணி வைப்பது வழக்கம். திருமணத்துக்காக கையில் மருதாணி வைத்துக்கொள்ள தனது தோழிகள் கேட்டுக்கொண்டபோது, வெறுமனே அழகுக்காக  அன்றி அதை அர்த்தத்துடன் செய்ய வேண்டும் என்று NO CAA, NO NRC என கையில் மணமகள் யாழினி எழுதிக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பெண், மாப்பிள்ளை வீட்டாரைவிட மணமக்களின் முகநூல் நண்பர்களும், திராவிட இயக்கத்தினருமே அதிக அளவில் பங்கேற்றார்கள். இதனால், முகநூலில் இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்களும், செல்ஃபிகளும்  ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு, இணையத்தையும் கலக்கின. விழாவுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் அசைவ விருந்துடன், பெரியார், அண்ணா, கலைஞரின் பொன்மொழிகள் அடங்கிய எனும் குறுநூலும் வழங்கப்பட்டது. திருமண அழைப்பிதழில்,  திருமணம் என்பது இணையரின் விருப்பத்தின் விளைவாய் இருத்தல் வேண்டும். உள்ளம் இரண்டறக் கலத்தல் வழி திருமணம் ஈடேற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் பொன்மொழியே பிரதானமாக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய வழக்கறிஞர் அருள்மொழி, தருமபுரி எம்.பி. செந்தில்குமார், திமுக இலக்கிய அணி எம்.எம்.அப்துல்லா, விடுதலைச் சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ், முன்னாள்  அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், இட ஒதுக்கீடு மற்றும் சாதி மறுப்பு திருமணத்துக்கு ஆதரவாகவும் பேசினார்கள்.

Tags : Madurai ,CAA ,Bridesmaids ,NRC , Self Hosted at Madurai: Bridesmaids with NO CAA, NO NRC
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்