×

இந்தியாவில் 70% ஏழைகளின் சொத்துகளை விட 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பெர்ன் நகரம்: இந்தியாவில் உள்ள 70% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிடவும், வெறும் 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதம் அளவுக்கு இருக்கும் பணக்காரர்கள், 70 சதவீத ஏழைகளுக்கு தேவையானதை விட அதிக சொத்துக்களை வைத்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் 50வது ஆண்டு கூட்டம் வரும் 21 முதல் 24ம் தேதி வரை சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு டைம் டு கேர் எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி உலக மக்கள் தொகையில் 60 சதவீத அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் நிதியை காட்டிலும், வெறும் 2 ஆயிரத்து 153 பணக்காரர்கள் அதிகளவிலான சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பூமியில் வாழும் மக்களில் 460 கோடி மக்கள் என்பது 60 சதவீதமாகும். அதேபோல் இந்தியாவில் 2018 - 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 63 கோடீஸ்வரர்கள் அதிக சொத்துக்களை வைத்திருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை ஒழிக்க உலக நாடுகள் கொள்கையை வகுக்காத வரையில் உலகில் இந்த ஏற்றத்தாழ்வு சமநிலையை அடைய வாய்ப்பே இல்லை என்று இந்தியாவுக்கான ஆக்ஸ்ஃபாம் தலைமை செயல் நிர்வாகி அமிதாப் பேஹர் தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்தியாவில் ஏராளமான பெண்களும், சிறுமிகளும் பல வீட்டு வேலைகளையும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை பராமரிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சமூகத்தின் நகர்வுக்கு இவர்களது பெரும்பணியே அடிப்படை ஆதாரமாக இயங்கி வருகிறது. இவ்வாறு அதிக நேரத்தை ஊதியமில்லாத வேலைகளைச் செய்யும் பெண்களுக்குக் கிடைக்கும் ஒரு சிறிய நேரத்தில் ஏதேனும் படிக்க வைத்து அல்லது வேலைக் கற்றுக் கொடுத்து ஒரு குறைந்தபட்ச வருமானத்தை ஈட்டும் வகையில் அரசுகளால் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய பொருளாதார மாற்றங்களால் கிடைக்கும் பயன்கள் அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.



Tags : India ,poor , India, 70% Poor, Property, 1% Rich, 4 times More, Study
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!