பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு: மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து

புதுடெல்லி: பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 21 மாநிலங்களில் பாஜக தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள  நிலையில், இன்று அக்கட்சியின் தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கப்பதற்கான தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராதாமோகன் சிங் கூறினார். பாஜக தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட  விரும்புபவர்கள் இன்று காலை 10 மணியிலிருந்து 12.30 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாஜகவின் செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா மட்டுமே இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேசிய தலைவர் பதவியை ஏற்கும் விசயத்தில் நாட்டின் பெரிய தேசிய கட்சியாக கருதப்படும் பாஜக தலைமை, பிற்பகல் 2.30 மணிக்கு மேல் ‘ஏகாதசி‘ திதி தொடங்குவதால், அதன்பின்னரே தேசிய தலைவர் பொறுப்பை நட்டா ஏற்க வசதியாக  தேர்தல் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, ஜே.பி.நட்டாவுக்கு பூங்கொத்து கொடுத்து மத்திய  உள்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

யார் இந்த ஜே.பி.நட்டா:

பீகார் மாநிலம் பாட்னாவில் 1960-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி ஜே.பி.நட்டா பிறந்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பாட்னாவில் முடித்துள்ளார். ஜே.பி.நட்டாவின் தந்தை என்.எல் நட்டா பாட்னா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக  பணியாற்றியுள்ளார். 1975-ம் ஆண்டு நெருக்கடிக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தொடங்கிய இயக்கத்தில் பணியாற்றிய நட்டா, தொடர்ந்து அரசியலில் நாட்டம் காட்டினார். 1977-ல் பாட்னா பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் அகில  பாரதிய பர்ஷத் சார்பில் போட்டியிட்டு செயலாளராக தேர்வு பெற்றுள்ளார்.

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சட்டப்படிப்பு முடித்தபிறகு 1991-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்றார். இமாச்சல் பிரதேச மாநிலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நட்டா, அமைச்சராகவும்  பதவி வகித்துள்ளார். தொடர்ந்து, நாடாளுமன்ற  உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நட்டா, 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும்  பணியாற்றியுள்ளார்.

59 வயதான ஜே.பி.நட்டா பாஜக வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பாடுபட்ட அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால், கட்சியின் செயல் தலைவராக இருந்து பாஜகவின்  தேசியத் தலைவராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: