×

பல ஆண்டுகள் தீவிரமாக யோசித்த பிறகே அரச குடும்பத்தில் இருந்து விலக முடிவெடுக்கப்பட்டது: இளவரசர் ஹாரி பேட்டி

லண்டன்: பல ஆண்டுகள் தீவிரமாக யோசித்த பிறகே அரச குடும்பத்தில் இருந்து விலக முடிவெடுத்ததாக பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், ஒரு நடிகை என்பதால் அரச கும்பத்தில் மரியாதை கிடைக்கவில்லை என தகவல் பரவியது. இதனால் ஹாரியும் அவரது மனைவி மேகன் மர்கலும் கனடாவில் குடியேற முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லண்டனில் நேற்று பேட்டியளித்த ஹாரி, ராணி எலிசபெத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், பிரிட்டன் மக்களை விட்டு பிரிந்து செல்லவில்லை. ராணி எலிசபெத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும், காமன்வெல்த் அமைப்பு மற்றும் ராணுவத்தில் பணியாற்றவும் விரும்பினேன். ஆனால், அரசு நிதியுதவி இல்லாமல், அதற்கு வாய்ப்பில்லை.

ஆகையால் எனது நிலையை உணர்ந்துவிட்டேன். கடமையை நிறைவேற்ற வேண்டியுள்ளது, என கூறியுள்ளார். மேலும், தாயார் இளவரசி டயானாவை 23 ஆண்டுகளுக்கு முன்பு இழந்துவிட்டதாக உருக்கமாக கூறிய ஹாரி, தம்மை வளர்த்து ஆளாக்கியது ராணி எலிசபெத் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், தந்தை இளவரசர் சார்லஸ் மற்றும் மூத்த சகோதரர் வில்லியம்ஸ் குறித்து ஹாரி எதுவும் குறிப்பிடவில்லை. அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகும் தனது முடிவுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு அவர் தமது நன்றியையும் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. இளவரசர் ஹாரி, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர். ஆப்கானிஸ்தானில் கூட்டுப்படையில் வீரராக இருந்து போரில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Harry , British, royal family, Prince Harry, Queen Elizabeth
× RELATED ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு...