திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகளுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

திருவாரூர்:  ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுசூழல் அனுமதியும், மக்களிடம் கருத்தும் கேட்க தேவையில்லை என்ற புதிய அறிவிப்புக்கு விவசாயிகள் பெரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளைநிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது என்றும், இதனால் விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு மற்றொரு பேரடியாக நேற்று மத்திய அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு இனி சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்றும், அதுமட்டுமின்றி பொதுமக்களுடைய கருத்து கணிப்பும் தேவையில்லை என்றும் அரசாணை வெளியிட்டுருக்கிறது.

இவற்றில் மொத்தம் 19,789 சதுர கி.மீ பரப்பளவில் 11 ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் 4,064.22 சதுர கி.மீ பரப்பளவு உள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் கடற்பகுதியை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமும் இல்லை. மேலும், இந்த திட்டத்தின் மூலம் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கொண்டு  விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால், அது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளைநிலங்களில் குழாய்களை பதிக்கப்போகிறது, இதனால் கிணறுகளை தோண்டும்போது கடலோரத்தில் நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. மக்களிடம் கருத்து கேட்கவும் அவசியமும் இல்லை. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மேற்பார்வை இல்லாததால் கடலோர சூழலியல் சிக்கல்களை சந்திக்கும் என்று, டெல்டா பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசின் இந்த புது அறிவிப்புக்கு எதிர்ப்பு மீண்டும் கிளம்ப தொடங்கியுள்ளது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் இத்த திட்டத்தை கைவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த அனுமதி என்பது எதிர்கால சமுதாயத்தையும், தமிழகத்தையும் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு உள்ளாக்கும். எனவே, எக்காரணத்தை கொண்டும் இத்திட்டத்தை கொண்டுவர கூடாது என்ற குரல் வலுக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள், பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : announcements ,Thiruvarur Farmers ,Thiruvarur , Thiruvarur, Hydrocarbon, Project, Farmers, Resistance
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்