×

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் ம்ற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். வரும் 22, 23ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலடியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், தூத்துக்குடி, மற்றும் கடம்பூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 1ம் தேதி முதல் இன்று(20.01.2020) வரையிலான காலகட்டத்தில் சென்னையில் 34.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழையின் அளவு 17.8 மி.மீ. ஆகும். அதன்படி, தற்போதைய மழையின் அளவு வழக்கத்தை 93% அதிகமாகும். ஆனால், சென்னையை தவிர மற்ற பகுதிகளில் இயல்பான மழை அளவை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. அதிலும், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் இந்த காலகட்டத்தில் மழை பதிவாகவே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், தர்மபுரி, கரூர், சேலம், தேனி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் மிக மிக குறைவான அளவே மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu ,New Delhi ,Puducherry ,Chennai Meteorological Center , Tamil Nadu, Puducherry, Weather, Rain, Chennai Weather Center
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்