×

ராமநாதபுரத்தில் சோகம்: வனங்களை சுற்றி பார்க்கும் போது உயிர் காக்கும் உபகரணம் வழங்காததால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம்:  குடும்பம் குடுபமாய் சுற்றுலா சென்ற இடத்தில் உயிர் காக்கும் கருவி வழங்கப்படாமல், அதிகாரிகளின் அலட்சிய செயலால் சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.  ராமநாதபுர மாவட்டம் திருவாடானை அருகே காரங்காடு, சதுப்புநில காடுகளை சுற்றி பார்ப்பதற்காக உசுலனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 பேர் வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வரும்போது படகோட்டி வேகமாக படகை திரும்பியதால் திடீரெனெ கடலில் படகு கவிழ்ந்தது. இதில் 15 பேரும் தத்தளித்த நிலையில், படகை இயக்கியவர் அவர்களை மீட்க உதவாமல் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த மீனவர்களே, அனைவரையும் மீட்டு கரைசேர்த்தனர். எனினும் விஸ்வ அஜித் என்ற 5 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.  படகில் 15 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருசிலருக்கு மட்டுமே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டதாக படகில் சென்றவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கியிருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என்றும் கூறுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால்
உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வன அலுவலர்களிடம் கேட்ட போது பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம், போதிய அளவு உயிர் காப்பு சாதனங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவரிடம் பேசியபோது விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஊழியர்கள் மீது குற்றசாட்டு உறுதிசெய்யப்பட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.


Tags : Ramanathapuram ,forests , Ramanathapuram, forests, boy, death
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...