வேலூர் கோட்டை வெளி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம்

வேலூர்: வேலூர் கோட்டை வெளி பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில், காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை செய்து வந்தார். நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலித்து வந்தார்களாம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடிந்ததும் சுமார் 9 மணியளவில் வேலூர் கோட்டை வெளி பூங்காவிற்கு சென்றனர். அங்கு அகழி அருகே அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடியை திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் இருந்து, நகை, செல்போன் பறித்தனர். பின்னர் காதலனை சரமாரியாக தாக்கி விரட்டி உள்ளனர். பின்னர், 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, இளம் பெண் அலறி கூச்சலிட்டார். ஆனால் ஒதுக்குப்புறமாக பகுதி என்பதால் சத்தம் வெளியில் கேட்கவில்லையாம். சம்பவ இடத்தில் இருந்து வெளியே ஓடி வந்த இளம்பெண்ணின் காதலன் வேலூர் வடக்கு போலீசில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை எஸ்பி பிரவேஷ்குமார், வேலூர் வடக்கு போலீஸ் நிலைய டிஎஸ்பிகள் பாலகிருஷ்ணன், கீதா மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், இளம்பெண்ணின் காதலனை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் பயிற்சி டிஎஸ்பிக்கள் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று, 3 மர்ம ஆசாமிகள் எந்த வழியாக வந்து, தப்பி சென்றனர் என விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் சிதறி கிடந்த ரத்த மாதிரிகளையும், குற்றவாளிகள் வீசிச் சென்ற பொருட்களையும் சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாநகரின் மையப்பகுதியில் வேலூர் வடக்கு, தெற்கு, மகளிர் என 3 போலீஸ் நிலையங்கள் உள்ள மைய பகுதியில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு கேள்விக்குறி

சம்பவம் நடந்த கோட்டை வரலாற்று சிறப்புக்களை தன்னகத்தே கொண்டதாகும். இங்கு ஜலகண்டேஸ்வரர் கோயில், மத்திய, மாநில அரசு அருங்காட்சியகங்கள், சர்ச், மசூதி ஆகியவை உள்ளன. இவற்றை காண உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஆனால் இவ்வாறு வருபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்களிடம் செல்போன், பணம் பறிப்பு மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பகல் நேரத்தில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் சரியாக பணியாற்றாமல் செல்போனை பார்த்து கொண்டு காலம் கழித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. மேலும் பூங்காவில் மின்விளக்குகள் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக பூங்கா மாறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது. எனவே இங்கு முழு நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகரிக்கும் குற்றங்கள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இளம் சிறுமிகள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை புகார் அதிகரித்தது. இதுகுறித்து 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 17 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை போக்சோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: